தீபாவளி முன்னிட்டு. கருணைத் தொகை ரூ.5 ஆயிரம் வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்.

தீபாவளிக்கு கருணைத் தொகை ரூ.5 ஆயிரம் வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயிலடியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நேற்றுகாலை தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராசு, மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாவட்ட பொருளாளர் குருசாமி, துணைத் தலைவர்கள் துரைச்சாமி, கண்ணகி, துணைச் செயலாளர்கள் தனசீலி, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில துணைத் தலைவர் பத்மாவதி தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழகஅரசு தீபாவளி கருணைத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு வழங்கப்பட்ட உரிமைகளை மத்தியஅரசு ரத்து செய்ய வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.

வேலை உறுதியளிப்பு திட்டத்தை பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலும் செயல்படுத்தும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். தினசரி ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கையில் கருப்புக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி முடித்து வைத்து பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *