நீதிமன்ற வழக்குகள் முடிந்த பிறகு எட்டு வழி சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்
நீதிமன்ற வழக்குகள் முடிந்த பிறகு சென்னை சேலம் எட்டு வழி சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
சேலம் – பெங்களூர் நெடுஞ்சாலையில் சேகோ சர்வ் பகுதியில் உள்ள இரும்பாலை சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று 21 .97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட மேம்பாலத்தை இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதை தொடர்ந்து 55.45 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்ட பணிகளை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் அரியானூர் மகுடஞ்சாவடி ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அனுமதி அளித்திருப்பதாகவும் இப்பகுதிகளில் பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்தார் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் விபத்துகளின்போது விலை மதிக்க முடியாத உயிரிழப்பு நேரிடுவதை தடுப்பதே அரசின் நோக்கம் என்று கூறிய முதலமைச்சர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிந்த பிறகு சேலம் சென்னை 8 வழி சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் இந்த சாலை சேலத்திற்கு மட்டுமானது அல்ல என்றும் மதுரை கோவை மற்றும் கேரளா செல்ல இந்த சாலை பயன்படும் என்றும் தெரிவித்தார் சென்னை சேலம் எட்டு வழி சாலை அமைக்கப்படுவதன் மூலம் 70 கிலோமீட்டர் சுற்றுப்பாதை குறைவதால் வாகனங்கள் இருந்து வெளியாகும் புகை கட்டுப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும் இதுபோன்ற நல்ல திட்டங்கள் வரும்போது வரவேற்க வேண்டும் என்றும் முக்கியமான திட்டம் என்பதால் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து நிலங்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும் அரசின் வளர்ச்சித் திட்டங்களை செயலாக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார் இந்த புதிய திட்டத்தினால் அதிமுக அரசுக்கு புகழ் கிடைக்கும் என்பதால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சென்னை சேலம் எட்டு வழி சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்ப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவை போன்றே தற்போதைய அரசும் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் இளைய தலைமுறையினர் விஞ்ஞான கல்வி வகையில் இதுவரை 38 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டிருப்பதாகவும் நடப்பாண்டில் மேலும் 15 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் சேலம் மாநகராட்சி பகுதியில் நாள்தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு கிடைத்திடும் வகையில் 110 கோடி ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டம் ஓராண்டில் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள காலியிடங்களில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் வகையில் இலவசமாக விதைகளை வழங்க அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த முதலமைச்சர் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி ரோகிணி மக்களவை உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்