ரோப் ஸ்கிப்பிங் போட்டி
சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்….
சேலம் மாவட்ட ரோப் ஸ்கிப்பிங் அசோசியேசன் மற்றும் தமிழ்நாடு ஸ்கிப்பிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டியானது சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. போட்டியை சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
போட்டியானது தனிநபர் விளையாட்டு, இரு நபர் விளையாட்டு, குழு விளையாட்டு என 11 வயதுக்குட்பட்டோர் பிரிவு, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவு, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவு மற்றும் 18 வயதுக்குட்பட்டோர் பிரிவு என மாணவ மாணவிகளுக்கு தனிதனியாக போட்டிகள் நடைபெற்றது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், கரூர், சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை திறன்பட வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஸ்கிப்பிங் விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.