அரிய வகை மூளை அறுவை சிகிச்சையை மேற்கொண்டு 54 வயது நபரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் அப்பல்லோ மருத்துவமனை
ஆசியாவின் மிகவும் நம்பகமான அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவினர் மிகவும் அரிய வகை மூளை அறுவை சிகிச்சையை மேற்கொண்டு 54 வயது நபரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். இந்த பிரிவிலேயே இது முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நபரின் மூளையின் ஒரு பகுதியில் இருந்து திரவம் சுரந்து அது காது வழியாக வெளியேறியது.
லோகநாதன் என்ற 54 வயது நபர் ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் கணக்குத் தணிக்கையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டாக அவ்வப்போது தலைவலி மற்றும் வலது காதில் வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் தமிழ்நாட்டில் உள்ள பல முக்கியமான மருத்துவமனைகளுக்குச் சென்ற போதும் அவரது தலை மற்றும் காது வலிக்கான சரியான காரணம் குறித்துத் தெளிவாகத் தெரிய வரவில்லை. ஒரு மருத்துவமனையில் அவரது வலது காதில் ஏற்பட்ட அழற்சிக்காக ‘டிம்பனோமாஸ்டோயிடெக்டமி’ என்ற அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அவருக்கு சில மாதங்களில் மேலும் சிக்கல் அதிகரித்தது. அவரது காதுகளில் இருந்து நீர் வெளியேற ஆரம்பித்ததுடன் அடிக்கடி தலைவலியும் ஏற்படத் தொடங்கியது. மேலும் சில மருத்துவமனைகளில் சென்று ஆலோசனைகளைப் பெற்று அதில் திருப்தி அடையாத நிலையில் சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் வந்தார்.
அவரது நோய் குறித்து கேட்டறிந்து அவரை பரிசோதித்த சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார், அவரது காதில் இருந்து இளஞ்சிவப்பான, துடிப்புள்ள, மென்மையான, நிறம் இல்லாத திரவம் வருவதைக் கண்டறிந்தார். அது வெளிப்புற ஆடிட்டரி கேனலில் இருந்து வந்த அது ரத்தம் போல இல்லை. சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்த போது உள் காதின் மேல் சுவரில் மிகப் பெரிய துளை இருப்பது தெரிய வந்தது. மூளையின் டெம்பரல் லோப்-பின் சிறு பகுதி இடம் பெயர்ந்து இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையை ஆராய்ந்த ஓஎம்ஆர் அப்பல்லோ மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் கிருஷ்ண குமார் மற்றும் சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜாய் வர்கீஸ் ஆகியோர், மூளைத் திசுவை உள்ளடக்கிய காதின் அகாஸ்டிக் கேனலில் ஏற்பட்ட இந்த துளையை சரி செய்ய சிறப்பு சிகிச்சையை மேற்கொண்டனர். டாக்டர் ஜாய் வர்கீஸ், மண்டை ஓட்டின் சிறு பகுதியை பிறித்தெடுத்து, அதன் உட்புறத்தில் உள்ள மென்மையான பகுதியை பயன்படுத்தி 10 மில்லி மீட்டர் நீளமும் 6 மில்லி மீட்டர் அகலமும் கொண்ட துளையை அடைத்தார். காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் கிருஷ்ணகுமார், இடம் பெயர்ந்த மூளைத் திசுவை கவனமாக அகற்றி, பாதிக்கப்பட்ட பகுதியை அடைத்தார். இந்த இரு மருத்துவர்களின் கடின முயற்சியின் மூலம் அந்த 54 வயது நபருக்கு ஏற்பட்ட உயிருக்கு ஆபத்தான பிரச்சினை சரி செய்யப்பட்டது.
இது குறித்து சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் கிருஷ்ணகுமார் விளக்குகையில், “அந்த நோயாளியைக் காப்பாற்ற 8 மணி நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற சிக்கல்கள் பெரியவர்களுக்கு மிக அரிதாகவே ஏற்படும். மூளைக்கு வெளியே உள்ள கடின சவ்வில் அழுத்தம் காரணமாக எப்போதாவது இப்படி ஏற்படலாம். 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நோயாளி ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். அந்த விபத்து இதற்கு காரணமாக இருக்கலாம் அல்லது நீண்ட நாள் நோய்த் தொற்று இதற்கு காரணமாக இருக்கலாம். இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்து விட்டால் இறுதியில் பெரிய விளைவு ஏற்பட்டு கடும் பாதிப்புகள் உண்டாகும்.” என்றார்.
இந்த அறுவை சிகிச்சை நடைமுறை குறித்து கருத்துத் தெரிவித்த ஓஎம்ஆர் அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஜாய் வர்கீஸ் மற்றும் அவரது குழுவினர், “இந்த நோயாளிக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு, டெம்பரல் லோபின் ஒரு பகுதி பெரிதாகி வெளியே வந்ததே காரணம். இதுவே நினைவாற்றல் மற்றும் உணர்ச்சிகளுக்குக் காரணமாக உள்ள பகுதி. மிகச் சிறிய வெளிப் பகுதி மட்டுமே அகற்றப்பட்டதால் நோயாளிக்கு வேறு எந்த பிரச்சினையும் ஏற்படாது. அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சைகளும் முறையாக வழங்கப்பட்டன. அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய காலத்தில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. மயக்க மருந்து சிகிச்சையில் இருந்து சுமுகமாக வெளியே வந்த அவர், சிக்கலின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார். அறுவை சிகிச்சைக்குப் பின் ஒரு வாரம் சிகிச்சை பெற்று அந்த நோயாளி வீடு திரும்பினார்.” என்று கூறினர்.