தமிழகம் தொழில் துவங்க உகந்த மாநிலம் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழகம் தொழில் துவங்க உகந்த மாநிலம்
எடப்பாடி பழனிசாமி பேச்சு
சென்னை, பிப்.7
தமிழகம் தொழில் துவங்க உகந்த மாநிலமாக திகழ்கிறது. இந்த அரசு உங்கள் அரசு; எப்போதும் நீங்கள் நாடலாம் என்று தொழில்முனைவோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். கோவை மோப்பிரிபாளையம், கள்ளப்பாளையத்தில் புதிதாக ‘கொடிசியா’ தொழிற்பூங்காக்களை முதலமைச்சர் துவக்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது அனைவரும் அறிந்ததே. வருங்கால சந்ததியின் நலனை கருத்தில் கொண்டு, கொண்டுவரப்பட்ட இந்தத் தடைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இதனால், பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் சில நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பிற பொருட்களை உற்பத்தி செய்வதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை மூலம் கடனுதவி உட்பட பல்வேறு வசதிகளையும் அம்மாவின் அரசு வழங்கி வருகிறது. அதை மேலும் அதிகரிக்கும்.
அரசின் இந்த முடிவுக்கு சிறு, குறு தொழில் நிறுவன அதிபர்கள் உதவிட வேண்டும் என்றும், குறைந்த விலையில் மாற்று பொருட்களை உற்பத்தி செய்து, பொது மக்களிடையே கொண்டு சென்று, அரசின் இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்திற்கான வெற்றியில் நீங்களும் பங்கு கொள்ள வேண்டும் என்று உங்கள் அனைவரையும் இந்தத் தருணத்திலே கேட்டுக் கொள்கிறேன்.
வேலை வாய்ப்பினை பெருக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சியினை முன்னேற்றவும் உதவிடும் வகையில், 3,100 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தி முனையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருவதாக இருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் வரமுடியவில்லை. இருந்தாலும், நம்முடைய கொடிசியா பகுதியிலே இந்த அமைப்பை உருவாக்குவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு உங்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே நேரத்தில், பெரியவர் ஐயா வரதராஜன் அழகாக, அருமையாக பல கருத்துக்களை இங்கே எடுத்து வைத்தார். ஒரு தொழிற்சாலை அமைப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இங்கே விரிவாக எடுத்துரைத்தார். அதுவும், நிலம் எடுப்பதற்கு எவ்வளவு பிரச்சினை இருந்தது, அதற்கு யார் யாரெல்லாம் உறுதுணையாக இருந்தார்கள் என்பதையெல்லாம் இங்கே விளக்கமாக எடுத்துச் சொன்னார். அதுமட்டுமல்லாமல், பெரிய தொழிற்சாலை வருகின்றபொழுது, அதிக முதலீடு தேவைப்படுகிறது, குறைந்த ஆட்கள் தான் அதிலே பணிக்கு சேர்க்கப்படுகின்றார்கள். அதே நேரத்தில், சிறு தொழில்கள் வருகின்றபொழுது அதிகமான வேலை வாய்ப்பு கிடைக்கின்றன, முதலீடு குறைவாக இருக்கின்றது, ஆகவே, வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு சிறு தொழிலை ஊக்குவிக்க வேண்டுமென்ற ஒரு கருத்தைச் சொல்லியிருக்கின்றார். அம்மாவினுடைய அரசு எப்பொழுதும் உங்களுக்குத் துணை நிற்கும் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விழைகின்றேன்.
அதேபோல, பெரிய தொழில்கள் அதிகம் வந்தால்தான், சிறு தொழில்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏனென்றால், பெரிய தொழிலுக்கு தேவையான உதிரி பாகங்களை சிறு தொழில் மூலமாகத்தான் கொடுக்க முடியும். பெரிய தொழில் ஊக்குவிக்கப்படுகின்றபொழுது சிறிய தொழில் தானாக வளரும் என்பதையும் இந்த நேரத்திலே குறிப்பிட விரும்புகின்றேன். எனவே, பெரிய தொழிலும், சிறிய தொழிலும் ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரம் போன்றது. இரண்டு சக்கரம் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். ஆகவே, இரண்டு தொழில்களும் ஒன்றாக இணைகின்றபொழுது தான், தொழில் மேம்பாடு முன்னுக்கு வரும், தொழில் வளர்ச்சி காண முடியும்.
அண்மையில்கூட, சென்னையில், அம்மா, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கின்ற தொழிலதிபர்களும், வெளிநாட்டில் இருக்கின்ற தொழிலதிபர்களும் நம்முடைய நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குவதற்காக 2015ம் ஆண்டு மிகப்பெரிய தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். இதில், சுமார் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது. அந்தத் தொழில் முதலீட்டாளர்களுக்கு நமது அரசு சிறப்பாக உதவி செய்ததின் விளைவாக அத்தனைபேரும் ஆர்வத்தோடு, இப்பொழுது ரூபாய் 3 லட்சத்து 431 கோடி முதலீடு செய்வதற்காக 304 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதற்கு முன் வந்திருக்கின்றார்கள்.
அஒரு தொழிற்சாலை புதிதாக வரவேண்டமென்று சொன்னால், 30 நாட்களுக்குள் அதற்கு அனுமதி வழங்க வேண்டுமென்ற உத்தரவையும் நாங்கள் பிறப்பித்திருக்கின்றோம்.
ஆகவே, தொழில் செய்வதற்கு உதவிகரமாக இருக்கின்ற அரசு அம்மாவினுடைய அரசு. அம்மா தொடங்கியதை, அம்மா அரசு தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே, தமிழகம் தொழில் துவங்க உகந்த மாநிலம் என்ற ஒரு பெயரை பெற்றிருக்கின்றது. அதற்குக் காரணம், தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது. மற்ற மாநிலங்களைப் பார்க்கின்றபொழுது தமிழகம் தான் சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா டுடே என்ற ஆங்கில நாளேடு பல்வேறு மாநிலங்களில் சர்வே செய்ததில், சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலத்தில் தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கின்றது என்றும், அதற்கான விருதை துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு வழங்கினார்.
சேலத்திலிருந்து கோவை வருகின்ற சாலை 8 வழிச்சாலையாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்தப் பணிகள் எல்லாம் துவங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், அவினாசியிலிருந்து மேட்டுப்பாளையம் வரைக்கும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சாலைகளை விரிவாக்கம் செய்வதன் மூலமாக உட்கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செய்து கொடுப்பதன் மூலமாக தொழில் வளம் பெருகும். அம்மாவினுடைய அரசு தொழில்முனைவோர்களுக்கு உதவியாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அரசு உங்களுடைய அரசு, நீங்கள் எப்பொழுதும் நாடலாம். உங்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றி வருகின்றோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், பி.பென்ஜமின், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், அர்ச்சுனன், அருண்குமார், சண்முகம், சின்னராஜ், கஸ்தூரி வாசு, ஆறுக்குட்டி, ஈஸ்வரமூர்த்தி, எம்.பி.க்கள் சி.மகேந்திரன், ஏ.கே.செல்வராஜ், மத்திய கயிறு வாரியத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கொடிசியா அமைப்பு தலைவர் ராமமூர்த்தி, மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஏ.வி.வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.