விஜய் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை
விஜய் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. அதன் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது
‘சர்கார்’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. அட்லி-விஜய் இருவரும் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். வசூல் ரீதியாக இரண்டு படங்களும் வெற்றியை பெற்றன.
விஜயின் 63வது திரைப்படமான இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக இணைகிறார். படத்தில் விஜய், கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகின. இதற்காக, கால்பந்து பயிற்சியையும் அவர் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கதிர், விவேக் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜை நடைபெற்ற புகைப்படங்கள் காலை முதல் வைரலாக பரவி வந்தன. இந்நிலையில் பூஜை நடைபெற்ற வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் விஜய் பலரையும் கைகுலுக்கி வரவேற்பதும், படக்குழுவினர் குத்துவிளக்கு ஏற்றி படப்பிடிப்பை தொடங்குவதும் இடம்பெற்றுள்ளது.