அண்ணாநகரில் 100 சவரன் கொள்ளை வழக்கு துப்புத்துலக்க முடியாமல் போலீசார் கடும் திணறல் : பொதுமக்கள் அதிருப்தி
அண்ணாநகரில் 100 சவரன் கொள்ளை வழக்கு துப்புத்துலக்க முடியாமல் போலீசார் கடும் திணறல் : பொதுமக்கள் அதிருப்தி
அண்ணா நகர் தொழிலதிபர் வீடு உள்பட 3 இடங்களில் 100 சவரன் நகைகள் மற்றும் 6 லட்சம் பணம் கொள்ளைபோன வழக்கில் துப்புத்துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். அண்ணாநகர், எல்.பிளாக் 1வது பிரதான சாலையை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (65). பெரம்பூரில் பைக் ஷோரும் நடத்தி வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி 5ம் தேதி குடும்பத்துடன் ஊருக்கு சென்றிருந்தபோது இரவு மர்ம நபர்கள் வீட்டை உடைத்து 100 சவரன் நகை, 1 லட்சம் பணம் மற்றும் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். மேலும் அன்று இரவு அதே பதியை சேர்ந்த முரளிகிருஷ்ணன் (40) என்பவரின் வீட்டு கண்ணாடியை உடைத்து 5 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களையும் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தை உடைத்து, 5 லட்சம் மற்றும் கண்காணிப்பு கேமரா கருவி ஆகியவற்றை திருடி சென்றனர்.
கொள்ளை கும்பல் போலீசாரிடம் சிக்காமல் இருக்க கொள்ளை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்குகளையும் தூக்கி சென்றனர். அதுமட்டுமின்றி தொழிலதிபர் வீட்டில் வெளிநாட்டு மதுபானங்களை குடித்து கும்மாளம் அடித்துவிட்டு எந்த அச்சமும் இன்றி சாவகாசமாக கொள்ளை அடித்து சென்றனர். அண்ணாநகர் பகுதியில் ஏற்கனவே பெரிய அளவில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதாகவும், போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடாமல் அலட்சியம் செய்வதாகவும் பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இந்த கொள்ளை சம்பவங்கள் போலீசாருக்கு சவால் விடும் விதமாக இருந்தது.
இதையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ஆசாமிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஆனால், கொள்ளை சம்பவம் நடந்து ஒரு மாதம் நெருங்கும் நிலையில் போலீசாருக்கு இந்த வழக்கில் துப்புக்கிடைக்காமல் இருப்பது கொள்ளையர்களை பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ‘‘இந்த கொள்ளையில் வெவ்வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளனர். 2 கும்பலை சேர்ந்தவர்களை நெருங்கிவிட்டோம்’’ என்றனர்.