சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் திடீர் மரணம்
சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் திடீர் மரணம்
சூலூர், மார்ச்.21-
சூலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் மரணம். இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் செய்தித்தாள் பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனது வீட்டிலேயே அவர் உயிரிழந்தார்.
வீட்டில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சூலூர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.-வின் மூத்த உறுப்பினரும், சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கனகராஜ் இன்று காலை 8 மணியளவில் மரணமடைந்தார். வீட்டில் ஓய்வில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை அறிந்த குடும்பத்தினர் உடனே அவரை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர்.
கனகராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சூலூர் சட்டமன்ற தொகுதியில் பலமுறை எம்.எல்.ஏ-வாக போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக-வின் மேற்கு மாவட்டங்களின் முக்கிய தலைவராகவும் கனகராஜ் இருந்தார்.
மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜூக்கு 64 வயது ஆகிறது. இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மேலும், இவர் அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். மறைந்த கனகராஜின் உடல் சூலூர் சுல்தான்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாகவுள்ள நிலையில், அதில் 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது கனகராஜின் மரணத்தால் காலியாகவுள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.
விரைவில் இவருடைய மறைவுக்கு அதிமுக தலைமைக் கழகம் இரங்கல் செய்தி வெளியிடும் என்று எதிரபார்க்கப்படுகிறது. மேலும், முதல்வரும் துணை முதல்வரும் மறைந்த கனகராஜ் எம்.எல்.ஏ உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சூலூர் தொகுதியில் போட்டியிட்ட இவர் சுமார் 35,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், அனைத்து தரப்பினரும் உடனே அணுகும் வகையில் எளிய சட்டமன்ற உறுப்பினராக கனகராஜ் திகழ்ந்தார் என சூலூர் தொகுதி மக்கள் சோகம் தெரிவிக்கின்றனர். கனகராஜ் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி தன்னுடைய கருத்தை தெரிவிக்க தயங்கமாட்டார்.