புகையும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கு
புகையும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கு
கோவை,மார்ச்.28-
கோவை : வெள்ளலூர் குப்பைக்கிடங்கு, தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இரவெல்லாம் பற்றியெரிந்தது. அடிக்கடி ஏற்படும் தீ விபத்தை கட்டுப்படுத்த, 24 மணி நேர கண்காணிப்பு குழுவை பணியமர்த்துவதுடன், தண்ணீர் லாரிகளை அதிகரிக்கவும், மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கோவை மாநகரில் சேகரிக்கப்படும் ஒட்டுமொத்த குப்பையும், வெள்ளலுலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு அடிக்கடி தீ மூட்டப்பட்டு புகை ஏற்படுவதாலும், போதிய சுகாதார நடவடிக்கை இல்லாததாலும் ஈ, கொசு, துர்நாற்ற பிரச்னைகளால், பொதுமக்கள் அனுபவிக்கும் பிரச்னைகள் ஏராளம்.
அருகில் வசிப்போர் பெரும் சிரமங்களுக்கு ஆளாவதுடன், சுகாதார பிரச்னையால் நோய் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர். இம்மாதம் மட்டும் இரண்டு முறை, குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் தீ பிடித்தது.இரு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். தீ மளமளவென, 60 சென்ட் பரப்புக்கு பரவியது. விண்ணை தொடும் வகையில் புகைமூட்டம் ஏற்பட்டதால், சுற்றுப் பகுதி மக்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். தீயணைப்பு துறைக்கு உதவியாக மாநகராட்சியின் எட்டு லாரிகளில், தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இரு பொக்லைன் இயந்திர வாகனங்கள், குப்பைகழிவுகளை பிரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
நேரம் செல்ல, செல்ல வாகனங்கள் உள்ளே செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அதிகாரிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி, மாநகர பொறியாளர் லட்சுமணன் உள்ளிட்டோர், குப்பை கிடங்கை நேற்று பார்வையிட்டனர்.மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத், குப்பைக்கிடங்கில் தீ பற்றும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.எதிர்காலத்தில் தீ பரவுவதை தடுக்க, குப்பை கிடங்கில் உள்ள மேடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம், குப்பை குவியலாக பிரித்து பராமரிப்பது, ஐந்து துப்புரவு ஆய்வாளர்கள், பணியாளர்கள் கொண்ட குழுவை, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட திட்டங்களை வகுத்துள்ளார் அவர்.
தற்போதுள்ள, 8 தண்ணீர் டேங்கர் லாரிகளுடன், கூடுதலாக ஐந்து லாரிகளும், இரு பொக்லைன் இயந்திரங்களுடன் கூடுதலாக இரண்டு பொக்லைன் இயந்திரங்களும், மேலும் ஒரு புல்டோசர் வாகனமும், வாடகைக்கு அமர்த்தி கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். இது குப்பை கிடங்கு சுற்றுப்பகுதியில் வசிப்போரை, ஓரளவு நிம்மதியடைய செய்துள்ளது.