தமிழ்ச் செவ்விலக்கியங்களே..! மொழியியல் அறிஞர் முனைவர் கு. சிதம்பரம் பேச்சு…!

உலகச் சிந்தனையாளர்கள் உருவாகக் காரணமாகத் திகழ்வது தமிழ்ச் செவ்விலக்கியங்களே..!

மொழியியல் அறிஞர் முனைவர் கு. சிதம்பரம் பேச்சு…!

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் சென்னை, அடையாறில் அமைந்துள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து 27.03.2019 அன்று செவ்விலக்கியங்களில் பன்முகப் பார்வை (தொல்லியல் – வரலாறு – பண்பாடு- மானுடவியல்- மொழியியல்) எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தப்பெற்றது. கருத்தரங்க தொடக்க விழாவில் அக்கல்லுரியின் இயக்குநர் மற்றும் செயலாளர் அருட்சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தன்பால் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். மாண்புமிகு நீதியரசர் பொன். கலையரசன் மற்றும் மாநிலக் கல்லுரியின் மேனாள் பேராசிரியர்கள் முனைவர் சுதந்திரமுத்து, பேரா. முனைவர் முத்துவேலு , இந்து நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரைகள் ஆசிரியர் திரு. சமஸ்ஆகியோர் கருத்தரங்க நூலினை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினர். அக்கல்லுரியின் துணை முதல்வர் பேரா. முனைவர் ஆரோக்கியமேரி கீதா ரூபஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

நிறைவு விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் கருத்துரை வழங்கினார்.அவர் பேசுகையில் செவ்வியல் என்ற பதத்திற்குத் திருந்திய,மேன்மை அடைந்த, உயர்ந்த, நாகரிகமடைந்த என்று பொருள் கொள்ளப்படுகின்றது. சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சமூகத்தில் நிலவி வந்த கருத்துகளை தமிழ்ச் செவ்விலக்கியங்கள் பதிவுச்செய்துள்ளன.இக்கருத்துகள் உலக மக்களின் வாழ்வியல் மேலாண்மைக்கு என்றும் பொருந்தக்கூடியதாக உள்ளது. உலக நாகரிகங்களுக்கு அக மற்றும் புறக் கோட்பாடுகளை வழங்கிய நாகரிகம் தமிழர் நாகரிகம். உலகத் சிந்தனையாளர்கள் உருவாகக் காரணமாகத் திகழ்வதும் தமிழ்ச் செவ்விலக்கியங்களே என்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறைப் பேராசிரியர் முனைவர் யா. மணிகண்டன் அவர்கள் கட்டுரையாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.அவர் பேசுகையில் இன்று தரமான கல்வியும் உண்மையான ஆய்வும் தமிழ் மொழியில் தேவை. அத்தேவையினை அறிந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உலக மக்களிடம் தமிழின் சிறப்புகளை கொண்டு சேர்க்கும் பணியினைச் சிறப்பாகச் செய்து வருகின்றது என்றார்.

இக்கருத்தரங்கில் பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை, களப் புல முதன்மையர் முனைவர் அகிலா சிவசங்கர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அக்கல்லுரியின் தமிழ்த் துறை தலைவரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான பேரா. முனைவர் சத்தியப்பிரியா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.பேரா. முனைவர் இராஜசேகர் அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். இக்கருத்தரங்கம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேரா. முனைவர் கோ. விசயராகவன், பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேரா. முனைவர் ஜோசப் துரை ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெற்றது. இக்கருத்தரங்கில் அக்கல்லுரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் முனைவர் தனஞ்செயன், ரெங்கராஜ், சுப்பிரமணியன்,தேவேந்திரன், மியான்மார் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *