மலைக்கோவிலூர் பகுதியில் பிரசாரம் செய்து ஸ்டாலின் பேசியதாவது:
(கரூர் நிருபர் மணிகண்டன்)
அரவக்குறிச்சி தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் செந்தில்பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர் நேற்றும் இன்றும் பிரசாரம் செய்தார். இன்றுமாலை மலைக்கோவிலூர் பகுதியில் பிரசாரம் செய்து ஸ்டாலின் பேசியதாவது:
மோடியை பதவியிலிருந்து நீக்க நீங்கள் லோக்சபா தேர்தலில் வாக்களித்திருப்பது எனக்கு தெரியும். இது 23 ம் தேதி வெளிப்படும். இதனால் மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி. அதே போல மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட எடப்பாடிக்கு விடை கொடுக்க நீங்கள் செந்தில்பாலாஜிக்கு வாக்களிக்க வேண்டும். மோடி சர்வாதிகாரி என்றால், எடப்பாடி உதவாக்கரை. மக்களைப்பற்றி கவலைப்படாத ஜென்மம். அவருடைய ஒரே எண்ணம் ஆட்சியில் இருப்பதுதான். அது மெஜாரிட்டியா, மைனாரிட்டியா என்பது குறித்து அவருக்கு கவலையில்லை. மோடி தயவில் அடிமையாக இருந்து ஆட்சியில் தொடர்கிறார். செந்தில்பாலாஜி உள்பட 18 எம்எல்ஏக்கள் ஆட்சியை கவிழ்க்க பார்த்ததால்தான் பதவி பறித்ததாக சொல்கின்றனர். அவர்கள் முதல்வரை மாற்றத்தான் கவர்னரிடம் மனு அளித்தனர். ஊரை, அதிமுக தொண்டர்களை ஏமாற்ற பாக்கெட்டில் ஜெ. படத்தை வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஜெ. இறந்த பின் ஒரு இரங்கல் கூட்டமாவது அதிமுகவினர் நடத்தினார்களா?
கலைஞர் உடல்நலக்குறைவால் இறந்த பின் நாங்கள் நடத்திய இரங்கல் கூட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் வந்தனர். அந்த கூட்ட நோட்டீசில் பெயர் போடாவிட்டாலும் கலைஞருக்காக நான் வருகிறேன் என்று ராகுல்காந்தி வந்தார்.என்னைப்பார்த்து சட்டசபையில் சிரித்ததற்காக ஓபிஎஸ் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. ஜெ. இறந்தவுடன் சசிகலாவை முதல்வராக்க முயற்சித்தனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் அவர் சிறைக்கு சென்றதால் அது முடியாமல் போனது. சசிகலா காலில் தவழ்ந்து முதல்வர் பதவியை பெற்றவர் எடப்பாடி.
ஜெ .மர்மமாக இறந்ததாக எதிர்க்கட்சிகள் சொல்லவில்லை. தற்போதைய துணை முதல்வர்தான் சொன்னார். இதற்கு அமைக்கப்பட்ட கமிஷன் 6 முறை ஓபிஎஸ்க்கு சம்மன் அனுப்பியும் ஒரு முறை கூட ஓபிஎஸ் ஆஜராகவில்லை. தற்போது செந்தில்பாலாஜி பல்வேறு திட்டங்களை அறிவித்து வாக்குறுதி அளித்திருக்கிறார். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். எனவே அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.