பிக்பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
பிக்பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சார்ந்த மகளிர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேஸ்வரி பிரியா,
60ஆண்டு காலமாக கலைத்துறையில் இருக்கும் கமலஹாசன் அவர்கள் இத்தகைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இரண்டு வருடமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து நான் போராடி வருகிறேன் .
மூத்த நடிகராகவும்,நாளை தமிழகத்திற்கு முதல்வராக நினைக்கும் கமல்ஹாசன் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தி வருவது வருத்தம் அளிக்கிறது .
இந்த நிகழ்ச்சியை நடத்தும் கமலஹாசன் அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
சமுதாயத்தை சீர்குலைக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.
இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப பெண்கள் சேர்ந்து எதிர்த்து போராட வேண்டும்.
இன்று நடந்து கொண்டிருக்கும் ஆணவ படுகொலைகள் பற்றி கமலஹாசன் அவர்களால் பேசமுடியுமா..?
ஆபாசமான உடைகளை அணிந்து நடிப்பதால் இளைஞர்கள் மனதளவில் பாதிப்பு அடைகிறார்கள்.
சின்னத்திரையில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சென்சார் போர்டு கட்டாயம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் இக்கண்டன ஆர்பாட்டத்தில் தின உரிமை மக்கள் இயக்கம் மற்றும் மகளிர் உரிமை கழகம் தலைவர் டாக்டர் பி.கல்பனா, தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் எம்.கலைச்செல்வி , பத்திரிக்கையாளார் ஸ்வேதா ரெட்டி அனைத்து மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் ஜி.எம்.விஜய் ஆனந்த் மாநில பொதுச் செயலாளார் வெங்கடேஷ் , கோபால் சமூக ஆர்வலர்கள் சுஜாதா, நீட்டூகவுர் மற்றும் ஏராளமான மகளிர் , கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.