புதிய காவல் கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவீண் குமார் அபிநபு இ.கா.ப. அவர்கள் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவீண் குமார் அபிநபு இ.கா.ப. அவர்கள் திறந்து வைத்தார்.


தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்டத்தின் புதிய காவல் கட்டுப்பாட்டு அறையை இன்று (27.11.2019) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் முன்னிலையில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவீண் குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
காவல் கட்டுப்பாட்டு அறையில் அவசர தொலைபேசி எண் 100 என்ற இலவச எண்ணிற்கு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக காவலர்களை அனுப்பி நடவடிக்கை எடுப்பார்கள். அவர்கள் எடுத்த நடவடிக்கை குறித்த விபரத்தினை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தி, அவைகள் பதிவேட்டில் பதிவு செய்து, அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் தணிக்கை செய்வார்கள்.
மேலும் இங்கு அனைத்து காவல் நிலையங்களின் வரைபடங்கள், தூத்துக்குடி, தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி ஆகிய 8 உட்கோட்டங்கள் வாரியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடங்களில் காவல் துணை கண்காணிப்பாளர் கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், நெடுஞ்சாலை காவல் ரோந்து பிரிவினர், மோட்டார் சைக்கிள் ரோந்து காவலர்கள் ஆகியோர்கள் தங்கள் தற்சமய இருப்பிடங்கள் (Location) குறித்து, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து அதை காவல் கட்டுப்பாட்டறையினர் வரைபடத்தில் காந்தப் பொத்தான்கள் (Magnetic Buttons) மூலம் குறியிட்டு வைப்பார்கள். இதன் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையினர், காவல்துறையினர் யார், யார் எங்கு இருக்கிறார்கள் என்பதை எளிதில் தெரிந்து கொண்டு பிரச்சனைக்குரிய இடங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல்துறையினரை அனுப்பி விரைவில் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
இந்த நிகழ்வின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. குமார், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் திரு. பிரகாஷ், மாவட்ட குற்றப்பிரிவு திரு. பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு திரு. பிரதாபன், கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் திருமதி. அன்னபாலா, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன், காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் திரு. ரமேஷ் பாபு, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் திரு. உமையொருபாகம், திரு. கிறிஸ்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *