ஜெம் மருத்துவமனையில் “ஜெம் லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோட்டிக் குடலிறக்கம் மற்றும் வயிறு மறுசீரமைப்பு சிகிச்சை மையம்” துவக்கம்

 

 

சென்னை, ஜூலை 11, 2021: மாண்புமிகு மாநில சுகாதார மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியம், அவர்கள்  சென்னையில் உள்ள ஜெம் மருத்துவமனையின், “ஜெம் லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோட்டிக் குடலிறக்கம் மற்றும் வயிறு மறுசீரமைப்பு சிகிச்சை மையத்தை” துவக்கி வைத்தார். இது, குடலிறக்க சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மையம்.

 

ஜெம் மருத்துவமனையில் ஹெர்னியா சிறப்பு மையத்தை துவக்கி வைத்து அமைச்சர் திரு.மா.சுப்ரமணியம், இந்த மையத்தை திறந்த ஜெம் மருத்துவமனையின்  டாக்டர்களை வாழ்த்தினார். அவர் பேசுகையில், “குடலிறக்கம், அனைத்து வயதினருக்கும் ஏற்படும் பொதுவான அறுவை சிகிச்சை பிரச்னை. குறிப்பாக தின கூலி தொழிலாளர்கள், வேளாண் தொழிலாளர்களுக்கு அதிகம் பாதிக்கிறது. லேப்ராஸ்கோபிக் எனப்படும் நுண் துளை அறுவை சிகிச்சையால், விரைவாக சிகிச்சையில் குணம் பெற்று, தங்களது வழக்கமான பணிகளுக்கு திரும்ப முடிகிறது. சிக்கல்களையும் தவிர்க்க உதவுகிறது. அன்றாட வாழ்க்கைக்கு விரைவாக திரும்பவும் முடிகிறது. கோவையை சேர்ந்த டாக்டர் பழனிவேலு, இந்தியாவில் முதல்முறையாக குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு நுண்துளை முறையை அறிமுகப்படுத்தினார். அவர் உலகில் உள்ள மற்ற மருத்துவர்களுக்கும் பயிற்சி அளித்து வருவது பாராட்டத்தக்கது.

 

ஜெம் மருத்துவமனை,  நுண்துளை அறுவை சிகிச்சை முறையை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் பயன்பெறும் வகையில், வழிகாட்டியாக செயல்பட்டு பயிற்சியும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு நுண்துளை அறுவை சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சையை பொதுமக்களுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கும். டாக்டர் பழனிவேலு எழுதிய “லேப்ராஸ்கோபிக் ஹெர்னியா” என்ற நுால், கொரியா, ஸ்பானிஷ், சீன மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனது வாழ்த்துக்கள்,”  என்றார்.

 

விழாவில், ஜெம் மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு அவர்கள் பேசுகையில், “ஹெர்னியா, பொதுவாக 27% ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 30-40% வரை அறுவை சிகிச்சையால் உருவாகிறது. வலி வரும் என்பதாலும், குணமாக நீண்ட நாட்கள் ஆகும் என்பதாலும் சரியான சமயத்தில் சிகிச்சை மேற்கொள்ளாமல் தள்ளிப்போடுகின்றனர். இவர்களில் 10%க்கும் அதிகமானோருக்கு குடல்வால் தொடர்பான நோய் ஏறபட்டு அவசரகால சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை அடிக்கடி மேற்கொள்வதாலும், மீண்டும் மீண்டும் உட்புறத்தில் ஹெர்னியா ஏற்படுகிறது. இதனால், குணமடைய நீண்ட நாட்கள் ஆவதோடு, தனிப்பட்ட முறையிலும், பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மீண்டும் குடலிறக்கம் ஏற்படாமல் முழுமையாக சரி செய்யப்பட்டால், அதை நாட்டிற்கு வழங்கும் மாபெரும் சேவையாக கருதலாம்.

 

“அதிநவீன அடிப்படை கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் இருப்பதாலும், மிகத்துல்லியமான 4கே/3டி லேப்ராஸ்கோபி் கருவி மற்றும் டா வின்சி ரோபோட்டிக் அமைப்புகள், இந்த வளாகத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள், குடலிறக்க நோயை, குறைந்தபட்ச தழும்பு, குறைந்த வலி, விரைவாக குணமடைதல், மீண்டும் வருவதை தடுத்தல் மற்றும் குறைவான கட்டணத்தில் சிகிச்சை பெறலாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்”.

 

“பலவித ஹெர்னியா உள்ளவர்களுக்கு தசையை வலுப்படுத்தி ஒருங்கிணைக்க வயிற்றுச் சுவர் மறுசீரமைப்பு அவசியமாகிறது. குடலிறக்க சிகிச்சை நிபுணர், பிளாஸ்டிக் சர்ஜன், மயக்கவியல் நிபுணர், குடல் நோயியல் நிபுணர், நுரையீரல் நிபுணர் மற்றும் வலி சிறப்பு நிபுணர் போன்ற அனைவரின் ஒருங்கிணைப்புடன் ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது”, என்று டாக்டர் பழனிவேலு தெரிவித்தார்.

 

சென்னை ஜெம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் எஸ். அசோகன் பேசுகையில், “பல்வேறு  சிக்கலான ஹெர்னியா நோயாளிகள், கடந்த காலங்களில் பல அறுவை சிகிச்சை மேற்கொண்டு பலனளிக்காமல் இருப்போர், ஜெம் மருத்துவமனையின் நிபுணத்துவம் மிக்க குழுவால், நுண்துளை அறுவை சிகிச்சை முறையில் சிகிச்சை பெறலாம். கடந்த 25 ஆண்டுகளில் எங்களது மருத்துவமனை 25,000 நுண்துளை ஹெர்னியா அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.” என்றார்.

 

 

 

 

சென்னை ஜெம் மருத்துவமனையின்  இயக்குனர் டாக்டர் பி. செந்தில்நாதன் இந்த சிறப்பு சிகிச்சை மையத்தை துவக்கி வைத்து பேசுகையில், ” இந்த நிறுவனத்தின் துவக்கத்தை முன்னிட்டு இலவச குடலிறக்க பரிசோதனை முகாம்களை நகரின் எல்லைப்பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, குடலிறக்க சிகிச்சைக்கான அறிகுறிகள் என்ன, அதற்காக உள்ள சிகிச்சைகள்  பற்றி விளக்கப்படும்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *