இந்தியா மற்றும் ஜி20: செயலாக்கத்திற்கான திட்டமிடல் – அஜய் சேத் & மைக்கேல் தேபப்ரதா பத்ரா

இந்தியா மற்றும் ஜி20: செயலாக்கத்திற்கான திட்டமிடல்

– அஜய் சேத் & மைக்கேல் தேபப்ரதா பத்ரா

 

கொள்கை ரீதியிலான சவால்கள் நிறைந்த கடினமான உலகளாவிய சூழலுக்கு மத்தியில் ஜி20 குழுவின் (G20) தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

உலக அளவில் மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகம், உயர் பணவீக்கம், தீவிர பணவியல் கொள்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய கடுமையான நடவடிக்கைகள், புவிசார் அரசியல் பதட்டங்கள், கடன் சுமை, காலநிலை மாற்றம் மற்றும் நீடித்து வரும் தொற்றுநோய் ஆகியவற்றால் ஜி20 இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளது.

உலகமயமாக்கல் என்ற அடிப்படை காரணி மூலம் பல்வேறு மையவிலக்கு சக்திகள் திசைக்கு ஒன்றாக எதிர்மறையாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் வேளையில், உலக அளவில் ஒருமித்த கொள்கை முடிவுகளை எடுப்பதில் ஜி20 அமைப்புக்கு முக்கிய பங்கு உள்ளது.

வாங்கும் திறன் சமநிலை (பிபிபி) விதிமுறைகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும், சந்தை மாற்று விகிதங்களின் அடிப்படையில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும் அமையப்பெற்று இருக்கும் இந்தியா, ஜி20 மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில், 3.6 சதவீதத்தையும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் 8.2 சதவீதத்தையும் கொண்டுள்ளது.

வரும் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதி ஆணையம் கணித்துள்ளது, இது ஜி20 உறுப்பு நாடுகளைக் காட்டிலும் மிக அதிகமானதாகும்.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவமானது, பொறுப்புக்கும், லட்சியத்திற்கும் இடையே ஒரு சமநிலையைக் கொண்டுவர முயற்சித்து, ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உள்ளடக்கியது.

 

டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் நமது முன்னேற்றம் மற்றும் சிறந்த நிதிஆதார அமைப்புகளில் இருந்து பெறப்பட்ட நமது அனுபவங்கள், நிதி இருப்புகளை விரிவுபடுத்துவதிலும், உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணிப்பதில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களைக் கையாள்வதிலும் தனித்துவமாக நாம் செயல்படுவோம் என்ற முனைப்பில் இருக்கின்றோம். ஜி20 தலைமைத்துவத்தின் மூலம் நம்மால் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ், நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் 2022 டிசம்பர் 13-15 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், இந்தியாவின் முன்னுரிமைகள் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். நிதி வழிமுறை அமைப்பு, சர்வதேச நிதி கட்டமைப்பு, உலகப் பொருளாதாரம், உள்கட்டமைப்பு முதலீடு, நிலையான நிதி, சர்வதேச வரிவிதிப்பு, சுகாதாரம் மற்றும் நிதி, நிதித் துறை ஒழுங்குமுறை சிக்கல்கள் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் எட்டு முக்கிய பணிகளை உள்ளடக்கியது.

ஜி -20 தலைமைத்துவத்தை ஏற்று, உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, “இந்தியாவின் ஜி-20 முன்னுரிமைகள் எங்கள் ஜி20 உறுப்பு நாடுகளுக்கு மட்டுமல்லாமல், உலகின் தெற்கு பகுதிகளுக்கும் தான் என்றும் அனைவருடனும் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும். ஏனெனில் உலகின் தெற்கு பகுதி மக்களின் குரல் பெரும்பாலும் கேட்கப்படாமலேயே உள்ளது’’ என்று அவர் கூறினார். இந்தியாவின் நிதி வழிமுறை அமைப்பின் முக்கிய முன்னுரிமைகள் அவரது உறுதிமொழியை செயல் வடிவமாக மாற்றுகின்றன.

உலகளாவிய நிதி பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கடன் பாதிப்புகளை நிர்வகித்தல், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மையின் மேக்ரோ பொருளாதார தாக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நாளைய நிலையான மற்றும் சிறந்த திறன் கொண்ட நகரங்களுக்கு நிதியளித்தல் ஆகியவை அடங்கும்.

பெரும்பாலான ஜி20 உறுப்பு நாடுகள் தங்கள் நிகர-பூஜ்ஜிய இலக்குகளை அறிவித்துள்ளதால், சரியான நேரத்தில் போதுமான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதில் நாங்கள் கவனம் செலுத்தி பணியாற்றுவோம்.

சர்வதேச வரிவிதிப்பு தொடர்பான நடவடிக்கைகளில், சவால்களை எதிர்கொள்வது, திறன் மேம்பாடு மற்றும் வரி வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது உட்பட, பல்வேறு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாங்கள் உருவாக்குவோம். தொற்றுநோய்களுடன் தொடர்புடைய சவால்கள் மற்றும் பாதிப்புகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்கும், புதிய தொற்றுநோய் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் தயார்நிலையை மேம்படுத்துவதற்கும், ஜி 20 நிதி மற்றும் சுகாதார ஒருங்கிணைப்பை நாங்கள் தொடர்ந்து உருவாக்குவோம்.

 

நிதித்துறை ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் மீது நாங்கள் தனிக்கவனம் செலுத்துவோம். கிரிப்டோ சந்தை தொடர்பான குழப்பங்களை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

 

வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நிதிச் சேவைகள் மற்றும் மூன்றாம் தரப்புச் சேவைகள் மீதான அதிகரித்த பயன்பாடுகள், நிதி அமைப்பை பல்வேறு சிக்கல்களுக்கு வழி வகுக்கின்றன. இந்த சிக்கல்களை சமாளிக்க மேலாண்மை கட்டமைப்பில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

 

பொருளாதாரம் மேலும் டிஜிட்டல் மயமாக்கப்படுவதால், இணையவழி ஆபத்துகள் நிதி அமைப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இணையவழி அபாயத்திலிருந்து கணினி அளவிலான பாதிப்புகளைத் தீர்ப்பதில் உலகளாவிய ஒத்துழைப்பை அதிகரிக்க செய்வோம்.

வரும் 2030 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தோரின் பணப் பரிமாற்றங்களின் பரிவர்த்தனைச் செலவுகளை 3 சதவீதத்திற்கும் கீழே குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.

நிதி கையிருப்பு உள்ளடக்கத்தை முன்னேற்றுவதற்கும் உற்பத்தித்திறன் நன்மைகளைப் பயன்படுத்துவதற்கும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவோம்.

ஒரு உறுதியான, சிறப்பான டிஜிட்டல் நிதிச் சூழலை உருவாக்குவோம்.

உலகளாவிய பிரச்சனைகளுக்கு உலகளாவிய ஒருங்கிணைந்த தீர்வுகள் தேவை என்ற ஜி20 நம்பிக்கை நிலைப்பாட்டில் செயல்படுவோம். உலகின் முக்கிய பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் ஒரு புதிய முயற்சிகள் மூலமாக உலகிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவோம்.

வளர்ந்து வரும் சவால்களைச் சந்திக்க, உலகப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் பல பின்னடைவுகளைச் சரிசெய்வதற்கும் உலகளாவிய கொள்கை ஒத்துழைப்பின் மூலம் தீர்வு காண்போம்.

‘வசுதைவ குடும்பகம்’ – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற தத்துவத்தை பின்பற்றி சமமாக மற்றும் முழுமையாக மனிதகுலம் முன்னேற அனைத்து வழிவகைகளிலும் செயல் ஆற்றுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *