ஜெயலலிதா சாவில் மர்மம்: பொன்னையன் சொல்கிறார்
ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்கு இன்று ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் வந்திருந்தனர். அவர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசியதாவது:-
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 73 நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பார்க்க எங்களைப் போன்ற முன்னணி நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை.
ஜெயலலிதாவுக்கு கடுமையான தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால் யாரும் பார்க்க கூடாது என்றார்கள். முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கூட வார்டுக்குள் அனுதிக்க வில்லை. மைத்ரேயன் டாக்டராக இருந்தாலும் அவரையும் அனுமதிக்க வில்லை.
ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுடன் இருந்த ஒரே நபர் சசிகலா மட்டும்தான். அவருக்கு ஏன் தொற்றுநோய் வரவில்லை?
ஜெயலலிதா ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு முன்பு போயஸ்கார்டன் வீட்டில் தாக்கி உள்ளனர். இதில்தான் அவர் மயக்கம் அடைந்து பாதி உயிருடன் அப்பல்லோ கொண்டு வரப்பட்டுள்ளார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நிறைய விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. சசிகலாவுக்கும், அப்பல்லோ மருத்துவமனைக்கும் ஏதோ உடன்படிக்கை உள்ளது. அதனால் தான் முன்னுக்குபின் முரணான தகவல்களை வெளியிட்டனர்.
எனவே ஜெயலலிதா சாவு மர்மம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு பொன்னையன் கூறினார்