அதிமுகவின் பிளவுபட்ட இரு அணிகள் இணையுமா இல்லையா
அதிமுகவின் பிளவுபட்ட இரு அணிகள் இணையுமா இல்லையா என்பதுதான் அரசியலின் இன்றைய ‘வெரி ஹாட்’ டாபிக். ஆனால் சுமார் 38 வருடங்களுக்கு முன் எம்.ஜி.ஆர் அதிமுகவை திமுகவுடனேயே இணைக்கும் ஒரு அதிரடி முடிவெடுத்த விஷயம், இன்றைய தலைமுறை அறிந்திராத சேதி.
1979 ம் ஆண்டு தமிழக அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. தமிழக அரசியலில் 1976ம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு அடுத்துவந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி 2 ஆண்டுகள் கடந்திருந்தது. பிரதமர் இந்திராவின் வெற்றிக்கு எதிராக ராஜ்நாராயணன் தொடுத்த வழக்கில் இந்திராவின் வெற்றி செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால் பதவியிழந்த இந்திரா எமர்ஜென்சியை அறிவித்து உலக அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தார்.
அடுத்துவந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜனதாக் கட்சி வெற்றிபெற்று மொரார்ஜி தேசாய் பிரதமரானார். தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் திமுகவை வீழ்த்தி எம்.ஜி.ஆர் முதல்வராகியிருந்தார்.
தேர்தல் வெற்றிக்குப்பின் எலியும் பூனையுமாக முன்னைவிடவும் மோசமாக மேடைகளில் முட்டி மோதிக்கொண்டிருந்தனர் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி.
இந்த நேரத்தில்தான் திமுக – அதிமுக இரண்டு கட்சிகளும் இணையப்போவதாக ஒரு செய்தி தமிழக அரசியலின் மேல்மட்டத்தலைவர்களிடம் பரவியது. ஆனால் இது நம்புவதற்கில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். காரணம் தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் பலம்பொருந்திய ஒருவராக உருமாறியிருந்த நேரம் அது. மக்கள் ஆதரவு அவருக்கு இந்திய அளவில் பெரும் புகழையும், கவர்ச்சிமிக்க மனிதராகவும் அடையாளப்படுத்தியிருந்தது. ஆனால் திமுக மக்களிடம் தன் செல்வாக்கை இழந்து தன் எதிர்காலம் குறித்த அச்சத்தோடு அரசியல் செய்துகொண்டிருந்தது.
இந்த சூழலில் அதிமுக – திமுக இணைப்பு என்பது நம்புவதற்கு துளியும் முகாந்திரம் இல்லாத தகவல் . ஆனாலும் சில வாரங்களில் அது நடப்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தபோது அதை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை எவராலும்.
1979 செப்டம்பர் முதல்வர் ஜனதாக் கட்சியின் ஒரிஸ்ஸா மாநில முதல்வர் பிஜூபட்நாயக் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார். இரண்டு கட்சிகளின் இணைப்பதற்காகவே அவரின் இந்த பயணம் என்பது உறுதியானது. அடுத்த பயணமாக எம்.ஜி.ஆரின் தி.நகர் அலுவலகத்தில் பிஜூ பட்நாயக் வந்தார். பரபரப்பானது அரசியல் களம். திமுக அதிமுக இணைவது உறுதியானது. அதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை செப்டம்பர் 13 ந்தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நடந்தது.
முன்னதாக அன்று காலை தமிழக அரசின் உளவுத்துறை டிஜிபியும், தனிப்பட்ட முறையில் தனக்கு நெருக்கமான மோகன்தாஸை ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்தார் எம்.ஜி.ஆர். அவருடன் உணவருந்தியபடியே ‘திமுக – அதிமுக இணைவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்றார்.
“மற்றவர்களுக்கு எப்படியோ இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் நிம்மதியடைவார்கள். அதிமுக உதயமான நாளில் இருந்து அவர்கள் ஒரு பதற்ற நிலையிலேயே இருக்கின்றனர். போராட்டம் மூலம் உங்கள் ஆட்சிக்கு சங்கடத்தைத் தர கருணாநிதி தன் தொண்டர்களை ஏவி விடுகிறார். பதிலுக்கு நீங்கள் காவல்துறையை ஏவி அதை ஒடுக்குகின்றனர். இதுதான் கடந்த 2 வருடங்களாக நடக்கின்றன. இரு கட்சிகளும் இணைந்தால் இதற்கு ஒரு விமோசனம் பிறக்கும். நீங்களும் மக்கள் நலனில் முழுமையாக கவனம் செலுத்தலாம்” என்றார். மோகன்தாஸின் பேச்சை காதுகொடுத்துக்கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர் நேரே பேச்சுவார்த்தை நடந்த சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.
பிஜூபட்நாயக்பேச்சுவார்த்தையில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆருடன் நெடுஞ்செழியன் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் பங்கேற்றனர். திமுக சார்பில் கருணாநிதி மற்றும் அன்பழகன் பங்கேற்றனர். விருந்தினர் மாளிகையின் ஒரு அறையில் நெடுநாட்கள் கழித்து கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் நீண்டநேரம் மனம்விட்டுப் பேசினர். 45 நிமிடங்களுக்குப்பின் அந்த அறையிலிருந்து வெளியேறிய இருவரது முகத்திலும் ஒருவித சாந்தம் தவழ்ந்தது.
பின்னர் பிஜூபட்நாயக் உடன் நடந்த பொதுவான பேச்சுவார்த்தையில், கட்சிக்கு திமுக என்ற பெயரே தொடர்வது, அண்ணாவின் உருவம் பொறித்த அதிமுக வின் கொடியே கட்சியின் கொடியாக இருப்பது, முதல்வராக எம்.ஜி.ஆரே நீடிப்பது என்றும் கட்சியின் தலைவராக கருணாநிதி பொறுப்பு வகிப்பது எனவும் பேசப்பட்டன. இருதரப்பிலும் அது ஏற்கப்பட்டது.
அடுத்துவரும் நாட்களில் இரண்டு கட்சிகளின் கிளைக்கழகங்கள் முதல் மாவட்டம் வரை தீர்மானங்கள் நிறைவேற்றி தத்தம் கட்சி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்க உத்தரவிடுவதாக, பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இரண்டு கட்சிகளின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் ஒப்புதல் பெற்று முடிவெடுத்து இணைப்பு நாளை உறுதிசெய்யும் என்று தெரிவித்தனர்.
இருவருக்கும் நடுவே ஒரு வரலாற்று சாதனையை படைத்துவிட்ட மகிழ்ச்சியில் நின்றிருந்தார் பிஜூ பட்நாயக். அதிமுக திமுக இணைப்பிற்கு ஜனதாக் கட்சி முக்கியத்துவம் அளிக்க காரணம், எமர்ஜென்சிக்குப் பிறகு அரசியலில் பெரும் மக்கள் ஆதரவை இழந்துநின்ற இந்திராகாந்தி மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்திருந்தார். இந்திராவுக்கு எதிராக அணிதிரண்டு வென்ற ஜனதாக்கட்சி இந்திரா என்ற செத்த பாம்பு உயிர் பெறுவது ஆபத்து எனக் கருதி அவரது வளர்ச்சியை தடுக்க நினைத்தது. தமிழகத்தில் 3 வது சக்தியாக இருக்கும் காங்கிரஸ் ஒவ்வொரு தேர்தல்களிலும் திராவிடக்கட்சிகளில் ஏதேனும் ஒன்றின் முதுகில் ஏறி அரசியல் அதிகாரத்தை அடைவதால் இரண்டு திராவிடக்கட்சிகளை இணைத்து அதை நேர் எதிரியாக்கிவிட்டால் அதை தடுத்துவிடலாம் என்பதே.
திமுக – அதிமுக இணைவது உறுதி என பேசப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறின அடுத்துவந்த நாட்களில். எம்.ஜி.ஆர் கட்சிகள் இணைப்பு பற்றிப் பேசுவதை தவிர்த்தார். அதில் அவர் மர்மமான மவுனத்தையே கடைபிடித்தார். இதுதொடர்பாக பிஜூபட்நாயக் ஒரு முறை சென்னை வந்தபோது அவரை எம்.ஜி.ஆர் பார்க்காமல் தவிர்த்ததாக சொல்லப்பட்டது. மேடைகளில் வழக்கம்போல் திமுக, அதிமுக இருதரப்பும் காரசாரமாக பேசிக்கொள்ள ஆரம்பித்த பின்னர்தான் இந்த பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியதை மக்கள் உறுதி செய்தனர்.
திமுக மற்றும் அதிமுக இணைப்பில் திமுக ஆர்வம் காட்டினாலும் எம்.ஜி.ஆர் ஏனோ இதை இறுதிநேரத்தில் மறுத்துவிட்டார் என்றார்கள். இந்த சம்பவம் குறித்து பின்னாளில் மோகன்தாஸ் தான் எழுதிய ‘எம்.ஜி.ஆர்; நிழலும் நிஜமும்’ என்ற நுாலில், ‘எம்.ஜி.ஆர் மிகுந்த நுணுக்கமானவர். அவர் எல்லோரிடமும் ஒரு கருத்தை கேட்பார். ஆனால் முடிவு அவருடையதாகத்தான் இருக்கும். இந்த நேரத்தில் இதைத்தான் செய்வார் என யாரும் அவரைக் கணிக்கமுடியாது. தனது தனிப்பட்ட வாழ்க்கையானாலும் அரசியலானாலும் தனது உள்ளுணர்வு சொன்னபடியே அவர் நடந்துகொண்டார். அப்படித்தான் இரு கட்சிகளின் இணைப்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் முடிவெடுத்த அவர் இறுதி நேரத்தில் அதிலிருந்து பின்வாங்கினார் ” என எழுதியிருந்தார்.
ஆனால் எம்.ஜி.ஆரின் இந்த முடிவுக்குப்பின்னால் ஒரு சுவாரஷ்யமான விஷயம் சொல்லப்பட்டது. திமுக – அதிமுக இணைப்பில் கருணாநிதிக்கு இருந்த அதே மகிழ்ச்சியும் விருப்பமும் எம்.ஜி.ஆருக்கும் இருந்தது. காரணம் திரையுலகில் பெரிய போட்டியின்றி ஒரு ராஜாவைப்போன்று விளங்கிய எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தபின் தனது சுதந்திர உணர்வை இழந்ததோடு 24 மணிநேரமும் பதற்றமாகவே கழிக்கநேர்ந்தது. எந்த நேரமும் எதிர்கட்சிகளின் விமர்சனங்களோடு வாழ்வை நடத்துவதும் சோர்வைத் தந்தது அவருக்கு. அதன் காரணமாகவே முதல்வராகப்பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அவர் சினிமாவில் தான் மீண்டும் நடிக்கப்போவதாக தடாலடியாக அறிவித்தது. இந்த அரசியல் பரபரப்புகளிலிருந்தும் கருணாநிதியின் எதிர்ப்பு அரசியலிலிருந்தும் விடுபட்டு நிம்மதியான ஒரு முதல்வராக அரசு அதிகாரத்தை சுவைப்பதை அவர் விரும்பியிருக்கலாம். இதனாலேயே இணைப்பில் ஆர்வம் காட்டினார்.
ஆனால் நடந்தது…?
தன் தாய் சத்தியபாமா மீது உயிரையே வைத்திருந்த எம்.ஜி.ஆர் அவரது பேச்சை மீறி எந்த காரியத்திலும் ஈடுபட்டதில்லை. எந்த விஷயத்திலும் தன் தாயை வணங்கி மானசீகமாக முடிவெப்பார் என்பார்கள். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் நேரே தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர் புறப்பட்டுவந்தார். அப்போது முதல்மாடியில் உள்ள தனது அறைக்கு செல்ல படியேறியபோது மாடிச் சந்திப்பில் மாட்டப்பட்டிருந்த சத்தியபாமாவின் படத்திலிருந்த மாலை அவிழ்ந்துவிழுந்தது. இதை அமங்களமாக அவர் கருதினார். ஒருவேளை தன் தாய் இந்த இணைப்பை விரும்பவில்லையோ என நினைத்து அந்த முடிவை அப்போதே கைகழுவினார் என்பார்கள்.
ஒருவேளை திமுக – அதிமுக இணைப்பு நிகழ்ந்திருந்தால் அரசியல் உலகில் என்னவெல்லாம் சுவாரஸ்யங்கள் அரங்கேறியிருக்கும் என்பதை அறிய முடியாமல் போனது தமிழர்களின் துரதிர்ஸ்டம் என்றுதான் சொல்லவேண்டும்