நிலக்கரி ஊழல்: சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்கா மீது சி.பி.ஐ. வழக்கு
புதுடெல்லி:
ரஞ்சித் சின்கா சி.பி.ஐ. இயக்குனராக இருந்த போது அவரை, 2ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதாகவும், எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மேலும், ரஞ்சித் சின்கா வீட்டின் பார்வையாளர் நுழைவுப் பதிவேட்டில் இடம்பெற்றிருந்தவர்களின் பெயர்ப் பட்டியலின் நகலும் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மற்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகள் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ரஞ்சித் சின்கா நடத்திய சந்திப்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், மத்திய கண்காணிப்பு ஆணையம் இந்த விசாரணைக்கு உதவ வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி விசாரணை நடத்தப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரஞ்சித் சின்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணையில் தலையிட முயன்றதாக தோன்றுகிறது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், வழக்கு மனுவை தாக்கல் செய்த பிரசாந்த் பூஷன், நீதிமன்றத்தில் ஒப்படைத்த பார்வையாளர்கள் பதிவேடு உண்மையானது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், ரஞ்சித் சின்கா மீதான புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு வெளியாகி மூன்று மாதங்கள் ஆன நிலையில், தற்போது ரஞ்சித் சின்கா மீது, ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.