முழு அடைப்பு போராட்டம் முழுமையான வெற்றி: மு.க.ஸ்டாலின் அறிக்கை

 சென்னை:

விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சி சார்பில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் முழுமையான அளவில் வெற்றி பெற்றிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளின் உரிமைகளைக் காக்கவும், தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம், முழுமையான அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்காக தமிழக மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போராட்டத்தில் வணிகபெருமக்கள், தொழிலாளர்கள், உணவக உரிமையாளர்கள், தனியார் நிறுவனங்களை நடத்துவோர், திரையுலகினர், இளைஞர்கள், பெண்கள் எனப் பலரும் பங்கேற்று விவசாயிகளின் நலன் காக்கவும், தமிழகத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி அமைதியான வழியிலே அறநெறியிலே மத்திய-மாநில அரசுகளுக்குத் தங்களின் எதிர்ப்பினைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

தி.மு.க, இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர்கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைப்பினரும் விவசாயிகள் சங்கத்தினரும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஒன்றிணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர். காவிரி டெல்டா மாவட்டமான-தலைவர் கலைஞர் அவர்களின் சொந்தத் தொகுதியான திருவாரூரில் நடந்த மறியல் போராட்டத்தில் நான் பங்கேற்று ஆயிரக்கணக்கானத் தொண்டர்களுடனும் தோழமைக் கட்சியின் நிர்வாகிகளுடனும் விவசாயிகள்-வணிகர்கள்-பொதுமக்கள் ஆகியோருடனும் கைதானேன். எங்களை மண்டபத்திற்கு அழைத்துச்செல்கிறோம் என 3 கிமீ. நடக்க வைத்ததில், இந்தப் போராட்டம் ஒரு பேரணியாக மாறியது.டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக, மேல்சட்டையின்றி குளிரிலும் வெப்பத்திலும் சளைக்காமல் போராடிய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சென்னை திரும்பி, இந்த அனைத்துக் கட்சிகளின் போராட்டத்தை ஆதரித்ததுடன் மட்டுமின்றி, டெல்லியிலிருந்து வந்த ரயிலிலிருந்து இறங்கியவுடனேயே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் போராட்டத்தில் அய்யாகண்ணு பங்கேற்று கைதாகியுள்ளார்.

ஒரு சில கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக இந்த முழு அடைப்பில் பங்கேற்கவில்லை என்றாலும் அவர்களும் இதிலுள்ள கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்தவர்கள்தான் என்பதை அறிவேன். தி.மு.க. மீது தனிப்பட்ட முறையில் சில அரசியல் கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. தமிழக விவசாயிகள் நலனுக்காக இலவச மின்சாரம், கூட்டுறவுக் கடன் ரத்து, உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியது தி.மு.க அரசு என்பதை காவிரி டெல்டா விவசாயிகள் உள்பட அனைத்துப் பகுதி விவசாயிகளும் அறிவார்கள். அரசியல் எல்லைகளைக் கடந்து இன்று இந்த முழுஅடைப்பு நடைபெற்றுள்ளது.தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்ட நிலையில், பேருந்து போக்குவரத்தும் பல இடங்களில் முழுமையாக இல்லை. அரசுத் தரப்பில் தங்களின் ஆளுமையைக் காட்ட வேண்டும் என காலி பஸ்களை பல இடங்களில் இயக்கியுள்ளனர். பொதுமக்களின் எண்ணங்களை மதிக்காமல் இத்தகைய வீண் போக்குகளை இனியாவது கைவிட்டு விவசாயப் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்தவேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைப்பதில் மத்திய அரசும், விவசாயிகளின் அனைத்து வகைக் கடன்களை ரத்து செய்வதில் மாநில அரசும் முனைப்பு காட்டிட வேண்டும். தமிழகத்திற்கு ஏற்படும் நிதிச்சுமையை மத்திய அரசு பங்கிட்டுக் கொள்ள வேண்டும். டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக உருவாக்க ஆவன செய்ய வேண்டும்.

பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர், தட்டுப்பாடின்றி கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுடன், இந்த வறட்சி காலத்தில் பட்டினிச்சாவுகளைத் தடுக்கும் வகையில் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு வழிகாணவேண்டும்.
மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் பெண்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர். சிறுவர்களும் போராடும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் மாநில அரசு, நெடுஞ்சாலைகளில் மூடிய கடைகளை எங்கே திறப்பது என்றும், சாலைகளை வகைமாற்றம் செய்வது குறித்தும் ஆராய்கிறது. இதனை எதிர்த்து தி.மு.கழகத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், 3 மாதங்களுக்கு மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இந்த முழு அடைப்பிற்கு கிடைத்துள்ள அடையாள வெற்றி.

கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும்வரை முனைப்பானப் போராட்டங்கள் தொடரும். தமிழக மக்களின் நலனுக்காகத் தோளோடு தோள் நிற்கும் தோழமைக் கட்சிகளின் துணையுடனும் ஒருங்கிணைப்புடனும் தொடர்ந்து களம் காண்போம்.

இது தேர்தல் வெற்றிக்கான அணி அல்ல. அதேநேரத்தில், மக்களின் நலனை ஆட்சியாளர்கள் புறக்கணித்து, தேர்தலை திணிக்கும் சூழலை உருவாக்கினால் நிச்சயம் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் அணியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *