சனி கிரகத்தில் புதிய சாதனையை நிகழ்த்திய காசினி

வாஷிங்டன்: சனி கிரகத்தை சுற்றி வந்தபடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள காசினி விண்கலம், தனது கடைசி பயணத்தின் போது புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.
சூரிய குடும்பத்தில் ஆறாவது இடத்தில் உள்ள சனி கிரகம், மற்ற கிரகங்களை விட மிகவும் வித்தியாசமானது. அந்த கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் அதற்கு ஒரு தனித்தன்மையை ஏற்படுத்தி உள்ளது. சனி கிரகத்தை சுற்றி வளையங்கள் உள்ளதை, 1675ம் ஆண்டு ஜியோவானி டொமினிகோ காசி என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார்.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 1997 ம் ஆண்டு அக்., 15ம் தேதி சனி கிரக ஆராய்ச்சிக்காக ஒரு விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்திற்கு காசினி என பெயரிடப்பட்டது. காசினி விண்கலம, 2004ம் ஆண்டு ஜூலை மாதம் சனி கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் சேர்ந்தது. அன்று முதல், 12 ஆண்டுகளாக சனி கிரகம், அதன் வளையங்கள், டைட்டன் என பெயரிடப்பட்ட சனி கிரகத்தின் துணைக்கோள் குறித்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை காசினி விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது.
காசினி விண்கலம் செயல்பாடு வரும் செப்., 15ம் தேதி முடிவுக்கு வருகிறது. தனது கடைசி பயணமாக, சனி கிரகம் மற்றும் அதன் வளையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் காசினி விண்கலம் செல்ல தொடங்கியது. விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனிகிரகத்தின் வடகோள பகுதியில், 22 முறை வலம் வர உள்ள காசினி கிரகம் மேலும் பல புதிய தகவல்களை அனுப்பும் என நாசா எதிர்பார்க்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *