நவீனமயமாகிறது பாம்பன் தூக்கு பாலம்
ராமநாதபுரம் : ஆளில்லா லெவல் கிராசிங்கில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி ராமநாதபுரத்தில் நடந்து வருகிறது. இதனை ரயில்வே தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். பாம்பன் தூக்குப் பாலத்தை நவீனமயமாக்கும் திட்டம் விரைவில் துவக்கப்பட உள்ளது. தற்போது வரை இந்த பாலம் மனிதர்களைக் கொண்டே தூக்கப்படுகிறது. இதனால் பாலத்தை தூக்குவதற்கு 15 நிமிடங்களும், இறக்குவதற்கு 15 நிமிடங்களும் ஆகிறது. இதனால் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக தூக்கு பாலம் திறப்பதை மின்சார மோட்டார் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் துவங்கப்படும். ஒரு மாதம் இப்பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது 600 டன் எடை கொண்ட இரும்பு ராடுகளால் உள்ள தூக்கு பாலம், எடை குறைக்கப்பட்டு 300 டன் உடையதாக மாற்றப்பட உள்ளது. ரூ.35 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தால் பாலத்தை ஒரு நிமிடத்தில் மின் மோட்டார்கள் கொண்டு திறக்க முடியும். இதனால் இந்த பாதையில் கூடுதலாக ரயில்கள் இயக்க முடியும். மின்சாரம் தடைபடும் சமயங்களில் நீர்மின்சக்தி மூலம் தூக்கு பாலம் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.