இந்தியன் வங்கி நிகர லாபம் ரூ.319.70 கோடி
இந்தியன் வங்கி கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2016-2017-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ. 319.70 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இது குறித்து இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கிஷோர் காரத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிதி விபரங்களை பொறுத்தவரை, 2016 – 17ன், கடைசி காலாண்டில், மொத்த வருவாய், 4,601.88 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் அது, 4,512.18 கோடி ரூபாயாக இருந்தது. இதுபோல், நிகர வருவாயும், 1,664 கோடி ரூபாயில் இருந்து, 18.41 சதவீதம் அதிகரித்து, 1,970.29 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 2016-2017-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ. 319.70 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
2015-2016-ஆம் நிதியாண்டில் ரூ.711.38 கோடியாக இருந்த நிகர லாபம் கடந்த நிதியாண்டின் முடிவில் ரூ.1,405.68 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த டெபாசிட் 2.37 சதவீதம் அதிகரித்து ரூ.1,82,509 கோடியாக உள்ளது.
நடுத்தர ரக வங்கிகளில், நாட்டிலேயே இந்தியன் வங்கி, சிறப்பான இடத்தை பிடித்து உள்ளது. அதுமட்டுமின்றி, பெரிய வங்கிகளுடன், போட்டி போடும் நிலையை எட்டியுள்ளது. வரும் நிதியாண்டில், இதை மேலும் மிகச் சிறந்த வங்கியாக மாற்ற உறுதி பூண்டிருக்கிறோம்.
இந்தியன் வங்கியில் தற்போது மத்திய அரசுக்கு 82 சதவீதப் பங்கு உள்ளது. வங்கியின் சார்பில் பொதுமக்களுக்கான பங்குகளை வெளியிடும்போது அரசு பங்கு 75 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும். தற்போது ரூ.3.15 லட்சம் கோடியாக உள்ள வங்கியின் மொத்த மொத்த வர்த்தகத்தை நிகழ் நிதியாண்டின் (2017-2018) இறுதியில் ரூ. 3.60 லட்சம் கோடியாக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். நடப்பு நிதி ஆண்டில், வங்கியின் கடனளிப்பில் மொத்த வாராக் கடன் விகிதம் 7 சதவீதத்துக்கு கீழும், நிகர வாராக் கடன் விகிதம் 4 சதவீதத்துக்கு கீழும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த காலாண்டில் வறட்சி காரணமாக வங்கியின் கடனளிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. நிகழ் நிதியாண்டில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டுக்கும், சில்லறை வர்த்தகத்துக்கும் அதிக அளவு கடன் வழங்கப்படும். வங்கியின் பரிவர்த்தனைகள் உள்பட அனைத்து செயல்பாடுகளையும் டிஜிட்டல் மயமாக்கத் திட்டமிட்டு வருகிறோம் என்றார். அப்போது, நிர்வாக இயக்குனர்கள், எம்.கே.பட்டாச்சார்யா, ஏ.எஸ்.ராஜிவ் ஆகியோர் உடன் இருந்தனர்