இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வாங்கித்தருவதாக பொதுமக்களுக்கு மர்ம நபர்கள் தொலைபேசி மூலமும், இணைய தளம் மூலம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்ற முயற்சிப்பதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. வேலை தேடுபவர்களை குறிப்பிட்ட தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துமாறும் அவர்கள் கூறிவருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
இது போன்ற ஆள் சேர்ப்பில் இந்திய விமான நிலைய ஆணையம் ஈடுபடவில்லை. எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ இதற்கான பணி வழங்கப்படவில்லை. பொதுமக்கள் இது போன்ற தொலைபேசி அழைப்புகள் வந்தாலோ, மின்னஞ்சல் வந்தாலோ எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய விமான நிலைய ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. சம்பந்தப்பட்டபவர்கள் மீது காவல் துறையில் புகார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனுமதியின்றி, இந்திய விமான நிலைய ஆணையத்தின் சின்னத்தையோ பெயரையோ பயன்படுத்துவது குற்றமாகும். இது போன்ற மோசடிகளில் ஏமாறுபவர்களுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
வேலை வாய்ப்புகள் குறித்த செய்திகளை http://www.aai.aero என்ற இணைய தள முகவரியில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வேலைவாங்கித் தருவதாக யாரேனும் அணுகினால் அது குறித்த தகவல்களை இந்திய விமானப்படை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.