போயஸ் கார்டன் வீடும் பறிமுதல்?: அரசு ஆலோசனை

 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை பறிமுதல் செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடும் பறிமுதல்?: தமிழக அரசு ஆலோசனை
சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயை கோர்ட்டு அபராதமாக விதித்தது.

அதுபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் கட்ட தவறினால் அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய 128 சொத்துகளை முடக்கி வைத்துள்ளனர். அந்த சொத்துகளில் 68 சொத்துகளை பறிமுதல் செய்து அரசுடமை ஆக்கும்படி கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான அந்த 68 சொத்துகளும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ளன. அந்த சொத்துகளை தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தின்படி பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பேரில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு உரிய குறிப்பிட்ட சொத்துகளை கையகப்படுத்த 6 மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகளை, தனி அதிகாரிகளாக நியமனம் செய்து 68 சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.

6 மாவட்டங்களிலும் விரைவில் இந்த பணி செய்து முடிக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பிறகு அந்த இடங்களில் “இது அரசுக்கு சொந்தமான இடம்“ என்ற போர்டு வைக்கப்படும். அப்போதுதான் ஜெயலலிதா, சசிகலாவின் எந்தெந்த சொத்துகள் அரசுடமையாகிறது என்ற முழு விபரமும் தெரிய வரும்.

68 சொத்துகளை அரசுடமையாக்கும் நடவடிக்கைகளை இந்த மாதம் (ஜூன்) இறுதிக்குள் நடத்தி முடித்து விட வேண்டும் என்று கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. எனவே 6 மாவட்ட கலெக்டர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

இந்த 68 சொத்துகளில் கணிசமானவற்றை அரசு துறைகளுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது. மீதமுள்ளதை ஏலத்தில் விட்டு விடுவார்கள் என்று வருவாய் துறையினர் சொல்கிறார்கள். இது பற்றிய இறுதி முடிவை தமிழக அரசு எடுக்கும்.

பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ள 68 சொத்துகளில் சில சொத்துகள் பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட காலி நிலங்களாகும். அவற்றின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.100 கோடி, சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்துக்கும், இந்த 68 சொத்துகள் பறிமுதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அபராதத் தொகை செலுத்தப்படாவிட்டால், அதற்கு ஈடாக ஜெயலலிதா, சசிகலா பெயரில் வங்கிகளில் உள்ள பணம் எடுத்துக் கொள்ளப்படும்.

அந்த பணமும் அபராத தொகையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாவிட்டால், ஜெயலலிதா, சசிகலாவின் நகைகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நகைகள் ரிசர்வ் வங்கி அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் விற்கப்பட வேண்டும் என்றும் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

எனவே ஜெயலலிதா பெயரில் உள்ள சில சொத்துகள் மட்டுமே மிஞ்சும். குறிப்பாக போயஸ் கார்டன் வீடு பறிமுதல் நடவடிக்கைக்கு உள்ளாகவில்லை.

போயஸ்கார்டன் வீடு உள்பட ஜெயலலிதா பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகளுக்கு அவரது வாரிசுகள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். அதாவது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா இருவரும் அதற்கு உரிமை கோர முடியும்.

அவர்கள் சட்டப்படி உரிமை கோராவிட்டாலோ அல்லது அதில் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, அந்த சொத்துகளை மாநில அரசு பறி முதல் செய்ய முடியும்.

அந்த வகையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடும் தமிழக அரசால் பறிமுதல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் சொத்துகளில் பெரும்பாலானவை அரசுடமை ஆகும் நிலையில் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுபற்றி தமிழக அரசும் ஆலோசித்து வருகிறது.

சட்ட நிபுணர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. வாரிசு பிரச்சனையை தவிர்த்து போயஸ்கார்டன் வீட்டை அரசுடமையாக்க, அறிவிப்பு வெளியிட அரசு தயாராகி வருகிறது.

எனவே போயஸ்கார்டன் வீடு பறிமுதல் செய்யப்படுவதற்கான உரிய அறிவிப்பை தமிழக அரசு எந்த நேரத்திலும் வெளியிட வாய்ப்புள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *