கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா மறைவு

 

மறைந்த கன்னட நடிகர் ராஜ் குமாரின் மனைவி பர்வதம்மா(78) நேற்று பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் கடந்த 1939-ம் ஆண்டு பிறந்த பர்வதம்மா தனது 13-வது வயதில் கன்னட நடிகர் ராஜ்குமாரை மணந்தார். நாடகத் துறையில் அனுபவம் வாய்ந்த பர்வதம்மா தனது கணவர் ராஜ்குமார் கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வர பக்க பலமாக இருந்தார்.
நீண்ட காலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பர்வதம்மா கடந்த மே 14-ம் தேதி பெங்களூருவில் உள்ள எம். எஸ்.ராமையா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4:40 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதால், பர்வதம்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரின் விருப்பப்படி பர்வதம்மாவின் கண்கள் தானம் செய்யப்பட்டது.
இதையடுத்து சதாசிவ நகரில் உள்ள ராகவேந்திரா ராஜ்குமாரின் இல்லத்துக்கு பர்வதம்மாவின் உடல் கொண்டு செல்லப்பட்டு, உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பிறகு பர்வதம்மாவின் உடல் பூர்ண பிரக்னா மைதானத்தில் வைக்கப் பட்டது. அங்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து நேற்று மாலை 6:30 மணியளவில் கண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு அருகிலேயே பர்வதம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *