காபூல் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் உளவுத்துறையே காரணம் – ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு
90 பேரை பலிகொண்ட காபூல் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத குழுவும், அந்நாட்டு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யும் காரணம் என ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
90 பேரை பலிகொண்ட காபூல் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத குழுவும், அந்நாட்டு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யும் காரணம் என ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டு தூதரகங்களை அமைந்துள்ள பகுதியில் நேற்று தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரம்பிய லாரிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த கோர தாக்குதலில் 90 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 300-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களும் தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஐ.எஸ் அமைப்பு அல்லது தாலிபான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஹக்கானி தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு இயக்குநரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. மேலும், ஹக்கானி குழுவுக்கு பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான
ஐ.எஸ்.ஐ இருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தனை மையமாக கொண்டுள்ள ஹக்கானி குழு, ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தாலிபான்கள் மற்றும் அல்-கொய்தா அமைப்பினருடனும் இக்குழுவுக்கு தொடர்பு உண்டு. அந்நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா மற்றும் நேட்டோ படை வீரர்களின் மீதும் ஹக்கானி குழு அதிகமான தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்.
காபூல் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ மீதான ஆப்கானிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து இன்னமும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.