ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற அமெரிக்க விமானப்படை முன்னாள் வீரருக்கு 35 ஆண்டு சிறை

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற அமெரிக்க விமானப்படை முன்னாள் வீரருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர், டைராட் புக். 49 வயதான இவர், அமெரிக்க விமானப்படையில் 1986-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை பணியாற்றி உள்ளார்.
இந்த நிலையில் டைராட் புக், 2015-ம் ஆண்டு எகிப்தில் இருந்து துருக்கிக்கு மடிக்கணினி, கம்ப்யூட்டர் உபகரணங்கள் உள்ளிட்டவற்றுடன் பயணம் செய்தது தெரியவந்தது. அவர் சிரியாவுக்கு செல்ல முயற்சித்துள்ளார்.
அங்கு அவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர முயற்சித்து வந்திருப்பதையும் அமெரிக்க போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து அவர் 2015-ம் ஆண்டு, ஜனவரி 16-ந் தேதி நியூஜெர்சியின் ஆஸ்பரி பார்க்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து, வேறொரு மதத்துக்கு மாறியவர் என்று தெரியவந்தது.
அவர் தன்னை ஒரு போராளி என்று குறிப்பிட்டும், தனது திறமைகளை புனிதப்போருக்கு பயன்படுத்த விரும்புவதாகவும் தனது மடிக்கணினியில் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இதையடுத்து அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிவில் அவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *