அருண் ஜெட்லியை சந்தித்து எடப்பாடியின் கடிதத்தை நேரில் கொடுத்தனர்

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை நேற்று டெல்லியில் சந்தித்த தமிழக அமைச்சர்கள், மத்திய அரசு தர வேண்டிய ரூ.17 ஆயிரம் கோடி நிலுவைத்தொகையை உடனே வழங்கக்கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை அளித்தனர்.
தமிழக அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் எம்.பி.க்கள் வேணுகோபால், நவநீத கிருஷ்ணன் ஆகியோர் நேற்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய ரூ.17 ஆயிரம் கோடி நிலுவைத்தொகையை உடனே வழங்கக்கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தையும் அவரிடம் சமர்ப்பித்தனர்.
பின்னர் வெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது மு.தம்பிதுரை கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பல்வேறு துறைகளுக்கு செலவிடப்பட்ட ரூ.17 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு தர வேண்டியுள்ளது. இந்த நிலுவைத் தொகையை தருமாறு பிரதமரை சந்தித்தபோது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் நிதி அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை இன்று அளித்துள்ளோம்.
தமிழகத்தில் பல துறைகளுக்கு நிதி தேவைப்படுகிறது. விரைவில் சட்டசபை கூட இருக்கிறது. எனவே, நிலுவைத்தொகையை உடனே விடுவிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொண்டோம். அதைத்தவிர நிதி அமைச்சரிடம் வேறு எதுவும் பேசவில்லை.
ஜனாதிபதி தேர்தல்
எப்போது?
ஜனாதிபதி தேர்தல் எப்போது நடக்கிறது? என்றே தெரியவில்லை. தெரிந்தால்தானே அதுபற்றி பேச முடியும். அண்ணா தி.மு.க.வைப் பொறுத்தவரை மக்கள் உணர்வுக்கு ஏற்ப செயல்படுவோம்.
மாட்டுக்கறி விஷயத்தில் மத்திய அரசின் முடிவில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. இதை அண்ணா தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் என்ற முறையில் நான் சொல்கிறேன். தமிழக அரசு உரிய பதிலை சொல்லும்.
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் மீது நடந்த தாக்குதல் தவறு. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *