முன்னாள் படைவீரர் வாரிசுகளுக்கு ரூ.3¾ லட்சம் – கல்வி ஊக்கத்தொகை: அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

 

10–வது தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக தின விழா ராணுவ நிறுவன மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் 18 பேருக்கு ரூ.3,75,000 – கல்வி உதவித் தொகையும், பணியாளர் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணியின் போது இறந்த 3 பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வீதம் விபத்து உதவித் தொகையும், டெக்ஸ்கோ தின விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:– முப்படைப் பணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்களின் வீரதீரச் செயல்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக வழங்கப்படும் பரம் வீர்ச் சக்ரா விருதுக்கான தொகை ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாகவும், அசோக் சக்ரா விருதுக்கான தொகை ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாகவும், மகாவீர்ச் சக்ரா விருதுக்கான தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாகவும், கீர்த்திச் சக்ரா விருதுக்கான தொகை ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாகவும், வீர்ச் சக்ரா விருதுக்கான தொகை ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாகவும், சௌரியச் சக்ரா விருதுக்கான தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாகவும் உயர்த்தி வழங்கியவர் ஜெயலலிதா.
மேலும் இந்த வீர விருது பெற்றமைக்கான பணமுடிப்பு தொகையானது மிக குறைவாக இருந்ததை கடந்த 2011–-ம் ஆண்டிலும் பண்மடங்காக உயர்த்தி வழங்கியவரும் அம்மாவே. இரண்டாம் உலகப் போரில் பணிபுரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி ரூ.4,000–-த்திலிருந்து ரூ. 4,500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் மூலம் மாநில, மத்திய அரசாங்கம் மற்றும் அதன் நிறுவனங்களில் 3,024 முன்னாள் படை வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அம்மா மின் திருட்டை தடுக்கும் வகையில், மின் திருட்டை தடுக்கும் படை ஒன்றை புதிதாக உருவாக்கி, மின்சார நுணுக்கம் அறிந்த 200 முன்னாள் படைவீரர்களை நியமித்தார்.
இதன் மூலம் 16.5.2011 முதல் 30.5.2017 வரை ரூ.141.52 கோடிக்கு மின் திருட்டு தடுக்கப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. டெஸ்க்கோவின் அனைத்து ஒப்பந்த பணியாளர்களுக்கும் ரூ.3 லட்சம் வரை இழப்பீட்டு காப்பீடு பெறும் வகையில் விபத்து காப்பீடு திட்டம் செயல்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 26 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன.
4,963 ஒப்பந்தப்
பணியாளர்கள் பலன்
டெக்ஸ்கோவால் சிபாரிசு செய்யப்படும் அனைத்து பணியாளர்களுக்கும் கனிணி பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி, கைபேசி பழுதுபார்த்தல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி உள்ளிட்ட செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 2,981 முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.69.24 லட்சம் செலவில் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. டெஸ்க்கோ மூலம் தற்போது பணியாற்றி வரும் 6,800 பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தினை 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 4,963 ஒப்பந்தப் பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.
முன்னாள் படைவீரர் நல கழகத்தின் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு சேவைகளின் மூலம் ரூ.839.10 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது, நிகர லாபமாக மட்டும் ரூ.73.22 கோடி ஈட்டப்பட்டுள்ளது. 2010–-11–ம் ஆண்டில் ரூ.7.49 கோடியாக இருந்த டெக்ஸ்கோ நிறுவனத்தின் நிகர லாபம் தற்போது 2016–-17–ம் ஆண்டில் ரூ.15.10 கோடி ஆகும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், அரசு பொதுத்துறை கூடுதல் செயலாளர், டெக்ஸ்கோ மேலாண்மை இயக்குனர் மைதிலி கே.ராஜேந்திரன், கர்னல் அஜய் உதய் தோரட், கர்னல் பி.பிரேம்குமார், துணை இயக்குனர் சி.ஆர்.பாலாஜி, பேராசிரியர் வெங்கட பாலசுப்பிரமணியம், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ஆர்.கே.ரவிசங்கர், டெக்ஸ்கோ பொது மேலாளர் பி.சாரதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *