8 லட்சத்து 79 ஆயிரம் பயனாளிகளுக்கு 3,505 கிலோ தங்கம், ரூ.2,960 கோடி நிதி உதவி
சமூக நலத்துறை மூலம் ஏழை எளிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 லட்சத்து 79 ஆயிரத்து 232 பயனாளிகளுக்கு 3,505.5 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. நிதி உதவியாக ரூ.2,960.70 கோடியும் ஆக மொத்தம் ரூ.3,951.23 கோடி செலவிடப்பட்டுள்ளது என சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் சமூக நலத்துறை சார்பில் ஏழை எளிய பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் விழா பேரறிஞர் அண்ணா அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா, ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் சிறப்பு விருந்திரனராக பங்கேற்றனர். இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை வகித்தார்.
இவ்விழாவில் அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா பேசும் போது கூறியதாவது:–
ஏழை எளிய பெண்களின் வாழ்வில் விளக்கேற்றும் வகையில் அவர்களின் திருமண கனவை நனவாக்கும் அதே நேரத்தில் அவர்களுக்கு கல்வி திறனையும் உயர்த்திடும் வகையில் ஜெயலலிதா செயல்படுத்திய சீரிய திட்டம் தான் ஏழை எளிய பெண்களின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமாகும்.
இத்திட்டத்தின்படி, அம்மா தாலிக்கு 4 கிராம் தங்கத்துடன் 10–ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.25,000–-ம், பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ.50,000–மும் வழங்கி சிறப்பித்தார்.
சமூக நலத்துறை மூலம் ஏழை எளிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 8,79,232 பயனாளிகளுக்கு 3505.5 கிலோ தங்கமாக வழங்கப்பட்டது. நிதியுதவியாக ரூ.2,960.70 கோடியும், தங்கம் வாங்கிய செலவீனம் ரூ.990 கோடியும் ஆக மொத்தம் ரூ.3,951.23 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மேலும், 2016–ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திட்டத்தின் அளவை 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்து ஆட்சி பொறுப்பு ஏற்றார். பொறுப்பு ஏற்றதும் 21.9.2016 அன்று இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். தமிழக அளவில் தாலிக்கு தங்கம் 8 கிராம் எடையுடைய 12,500 நாணயங்கள் 100 கிலோ எடையில் 6,273 பட்டதாரி பெண்களுக்கும், 6,277 பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கும் ரூ.687.38 கோடி நிதியுதவியும் வழங்கப்படும் என்றார்.
இவ்விழாவில் பேசிய ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் கூறியதாவது:–
2011–ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017 வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 41,729 ஏழை எளிய பெண்களுக்கு 119 கோடியே 21 லட்சத்து 25 ஆயிரம் நிதியுதவியாகவும், 166.916 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று 799 ஏழை எளிய பெண்களுக்கு 6.392 கிலோ தங்கமும், 2 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரம் திருமண நிதியுதவியும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 25 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் ரூ.1,97,675 மதிப்பில் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 67 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
7,029 மாற்றுத்திறனாளிகள் ஆண்டிற்கு ரூ.12.12 கோடி பரா மரிப்பு உதவித்தொகையாக பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்த நிதியாண்டில் இதுவரை 2,170 மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. 677 மாற்றுத்திறனாளிகளின் கல்வி உதவித்தொகையாக ரூ.28 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இவ்விழாவில் 799 ஏழை எளிய பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம், மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்கு 3 சக்கர சைக்கிள்கள், 2 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் என ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலும், 25 பயனாளிகளுக்கு ரூ.1,97,675 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களையும், 17 திருநங்கைகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகளையும் 8 திருக்கோயில்களுக்கு தலா ரூ.2,400 மதிப்பிலான பூஜை உபகரணங்களையும் அமைச்சர்கள் வழங்கினார்கள்.
பின்னர் காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு 2015-–2016 திட்டத்தின் கீழ் களக்காட்டூர் கிராம சேவை மையம் கட்டிடம் ரூ.17 லட்சம் மதிப்பிலும், காலூர் ஊராட்சியில் கிராம சேவை மைய கட்டடம் ரூ.17 லட்சம் மதிப்பிலும், ஆசூர் ஊராட்சியில் கிராம சேவை மையம் கட்டிடம் ரூ.14.43 லட்சம் மதிப்பிலும், அவளூர் ஊராட்சியில் கிராம சேவை மைய கட்டடம் ரூ.14.43 லட்சம் மதிப்பிலும் அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா மற்றும் அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மையத்தை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பழனி, எம்.கோதண்டபாணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, சார் ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், சமூக நலத்துறை துணை இயக்குனர் ரேவதி, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா ஆகியோர் பங்கேற்றனர்.