இளைஞர்களுக்கு சுய தொழில் உருவாக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய வங்கியாளர்களுக்கு நினைவு பரிசு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் உருவாக்கும் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட வங்கியாளர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
ஊரக தொழில்துறை அமைச்சர் பேசியதாவது:–
தமிழக அரசு தொழில் வணிகத் துறை மாவட்ட தொழில் மையம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் சுய தொழில்கள் துவங்கும் பொருட்டு யுஒய்இஜிபி திட்டம் அதாவது படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிஎம்இஜிபி பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் நீட்ஸ் புதிய தொழில் முனைவோர் தொழில் மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களை மாவட்ட தொழில் மையம் வாயிலாக சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் யுஒய்இஜிபி திட்டத்தின் கீழ், 2016–-17 நிதியாண்டில் 545 இளைஞர்களுக்கு ரூ.3 கோடியே 29 லட்சம் மானியத்துடன் ரூ.8 கோடியே 43 லட்சம் கடனுதவியும், பாரத பிரதமரின் சுய வேலை வாய்ப்பு உருவாக்கும் பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் 44 நபர்களுக்கு ரூ.1 கோடியே 11 லட்சம் மானியமாகவும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு (நீட்ஸ்) திட்டத்தின் கீழ், 52 நபர்களுக்கு ரூ.20 கோடியே 80 லட்சம் திட்ட மதிப்பில் ரூ.5 கோடியே 20 லட்சம் மானியமாக வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை 44 நபர்களுக்கு ரூ. 4 கோடியே 55.36 லட்சம் வங்கிகளால் கடன் ஒப்புகை வழங்கப்பட்டு 18 நபர்களுக்கு ரூ.1 கோடியே 57.84 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட சுய தொழில் உருவாக்கும் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு கடன் வழங்கிய வங்கியாளர்களை கௌரவிக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளருக்கும் மற்றும் கிளை மேலாளர்களுக்கும் நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பிக்கப்படுகிறார்கள். இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு அதிகளவில் கடனுதவிகளை பெற்று வழங்கப்படும் என அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை வகித்தார். அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் பி.பலராமன் (பொன்னேரி), பி.எம்.நரசிம்மன் (திருத்தணி), டி.ஏ.ஏழுமலை (பூவிருந்தவல்லி), திருவள்ளூர் – -காஞ்சிபுரம் ஆவின் கூட்டுறவு தலைவர் த. சந்திரன், துணை இயக்குநர் (மாவட்ட தொழில் மையம்) கண்ணன், பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) கே.ரவி, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.