மேலும் 129 மருத்துவமனைகளுக்கு அம்மா ஆரோக்கிய திட்டம் விரிவுபடுத்தப்படும்
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட உன்னத திட்டமான ‘‘அம்மா ஆரோக்கிய திட்டம்” மேலும் 129 மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31–-ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பாக இந்த ஆண்டும் உலக புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி ஏற்பாடு செய்யப்பட்டு, இதனைத் தொடர்ந்து அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பேசியதாவது:–-
இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் ‘‘புகையிலை – முன்னேற்றத்திற்கு ஒருதடை” என்கிற கருப் பொருளை தேர்வு செய்துள்ளது. புரட்சித் தலைவிஅம்மா புற்றுநோயை ஏற்படுத்தும் வாயிலிட்டு மெல்லும் வகை புகையிலை பொருட்களான பான்மசாலா, குட்கா ஆகியவற்றின் உற்பத்தி, இருப்பு மற்றும் உபயோகத்தை தடை செய்து தமிழக மக்களை புற்றுநோய்அரக்கனிடமிருந்து காப்பாற்றியுள்ளார். அம்மாவை பொறுத்தவரையில் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் தமிழக மண்ணில் அனுமதிக்கவே மாட்டார்.
புகையிலை உபயோகிப்போர்
குறைந்தது
அம்மாவின் அரசு எடுத்த சீரிய முயற்சி மற்றும் தொடர் நடவடிக்கையின் காரணமாக தமிழ்நாட்டில் 2009-–10-ல் 16.20 சதவீதமாக இருந்த புகையிலை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை 5.2 சதவீதமாக குறைந்துள்ளது.
2015–ம் ஆண்டு அம்மாவால் துவக்கி வைக்கப்பட்ட வாய் புற்றுநோயை கண்டறியும் முன்னோடித் திட்டம் (பைலட் திட்டம்) தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மருத்துவர்கள் வீடு வீடாக சென்று ‘ஹேண்ட் கெல்ட் டிவைஸ்’ மூலமாக வாய்புற்றுநோய் உள்ளதை கண்டறிவர். இதுவரை 22 லட்சத்து 24 ஆயிரத்து 961 மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
புரட்சித்தலைவி அம்மாவால் 1.3.2016 அன்று துவக்கி வைக்கப்பட்ட அம்மாஆரோக்கிய திட்டத்தின் கீழ் வாய்புற்றுநோயை கண்டறியும் பரிசோதைனையும் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 20 லட்சத்து 67 ஆயிரத்து 437 நபர்களுக்கு இப்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது 400 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் விரைவில் 31 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 98 அரசு பொது மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்படும்.
அம்மாவின் அரசு புகையிலை பயன்பாட்டினை குறைக்க தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தை மிகச் சிறப்பாக நடைமுறைபடுத்தி வருகிறது.தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் விழுப்புரம், காஞ்சிபுரம், மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகியவை முன் மாதிரி மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சட்ட அமலாக்கம், புகையிலை விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த மாவட்டங்களில் அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் புகையிலைப் பழக்க விடுபடு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இதுவரை 5000–-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் நிலை தமிழ்நாட்டில் ஏற்பட அம்மாவின் அரசு தொடர்ந்து பாடுபடும் என்றார்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை இயக்குனர் க.குழந்தைசாமி, மருத்துவக் கல்விஇயக்குனர் ஏ. எட்வின் ஜோ, அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பி.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.