கோர்ட்டில் தடைபெற்றதால் 2 முறை இடிக்கமுடியவில்லை: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை சில்க்ஸ் கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டது என்றும் கோர்ட்டில் தடைபெற்றதால் 2 முறை இடிக்கமுடியவில்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தீவிபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிட விவகாரம் குறித்து வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2000-ம் ஆண்டில் வணிக வளாக கட்டிடம் கட்ட சென்னை சில்க்ஸ் அனுமதி கேட்டு மனு செய்தது. தளம் மற்றும் 4 தளங்கள் கட்டுவதற்காகத்தான் அனுமதி பெற்றது. அவர்கள் அனுமதியை மீறி 8 தளங்கள் கட்டினார்கள்.
இதனால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பணியை நிறுத்தவும் 6.7.2000-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கட்டிடத்தை இடிப்பதற்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் பிறகு சி.எம்.டி.ஏ. சார்பில் நாளேடுகளில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடம் என்ற பெயரில் பொதுமக்கள் கவனத்துக்காக விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த நோட்டீஸ்கள் எல்லாம் அனுப்பிய பிறகு உயர் நீதிமன்றத்தில் கட்டிட உரிமையாளர்கள் மனு செய்தார்கள். அதன் பிறகு சி.எம்.டி.ஏ. 18.8.2006-ம் ஆண்டு இடிக்கும் பணியை தொடங்கியது. உடனே அதற்கு நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றார்கள். இதனால் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
23.8.2006-ல் இடைக்கால தடை ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 25-ந்தேதி மீண்டும் இடிக்கும் பணி தொடங்கியது. இதற்கிடையில் 28-ந்தேதி மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளிக்காததால் மீண்டும் 29-ந்தேதி இடிக்கும் பணி தொடங்கியது. 5, 6, 3 தளங்களிலும் இடிப்பதற்காக பெரிய ஓட்டைகள் போடப்பட்டது. அவ்வாறு இடித்தால் கட்டிடத்தின் கீழ் பகுதி உறுதித்தன்மையை பாதிக்கும் என்று கட்டிட உரிமையாளர் முறையிட்டார். இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் மூலம் உறுதித் தன்மை பரிசோதிக்க குழு அமைக்கப்பட்டது.
மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை துண்டிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதமும் எழுதப்பட்டது. கட்டிடத்தை காலி செய்யும் படி 21.5.2007-ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுப்பதை தடை செய்யும் விதமாக ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதை எதிர்த்து ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
12.8.2011-ல் ஒரு குழுவை நியமித்து தி.நகர் பகுதியில் அனுமதியில்லாத கட்டிடங்களை ஆய்வு செய்து இடிப்பது தொடர்பாக அறிக்கை அனுப்பும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சி.எம்.டி.ஏ.யும் மாநகராட்சியும் இணைந்து ஆய்வு செய்து 86 கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டதாக அறிக்கை அளிக்கப்பட்டது.
அப்போது சென்னை சில்க்ஸ் உள்பட 25 வணிக வளாகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
1.11.2011 அன்று அனைத்து கடைகளையும் பூட்டி சீல் வைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதை எதிர்த்து ரெங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் ரோடு வணிகர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்கள். சுப்ரீம் கோர்ட்டு மனுதாரர்களையும் வழக்கில் சேர்த்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
மேலும் வணிகர்கள் முறையிட்டதாலும் பண்டிகை காலம் என்பதாலும் 6 வாரங்களுக்கு மட்டும் சீலை அகற்றும் படியும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 10.1.2012 அன்று சென்னை சில்க்ஸ் உள்பட 25 கடைகளின் சீல் அகற்றப்பட்டது.
இதற்கிடையே இது தொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டில் பல முறை விசாரணை வந்து ஒத்தி வைக்கப்பட்டது. நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தில் 113-சி என்ற புதிய பிரிவு ஏற்படுத்தி 1.7.2007-க்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களை வரை முறைப்படுத்துவதற்கான பரிந்துரைகள் அளிக்கப்பட்டது.
இந்த புதிய பிரிவை எதிர்த்து வழக்குகள் தொடரப் பட்டு அது நிலுவையில் உள்ளது. புதிய சட்டப்பிரிவு 113-சின் விதிகளை அரசு அறிவித்த பிறகு நடவடிக்கை எடுக்கவும் என்று கோர்ட்டு சுட்டிக்காட்டியதால் சென்னை சில்க்ஸ் மீதான நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.
இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.
நிருபர்கள்:- கட்டிடம் கட்டும் போதே அதிகாரிகள் கண்காணிப்பது கிடையாதா?
அமைச்சர் பதில்:- கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடக்கத்தான் செய்கிறது. கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன. என்னென்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி சி.எம்.டி.ஏ. இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறோம்.
கே:- விபத்துக்கள் ஏற்படும் போதுதான் இப்படி நடவடிக்கை எடுக்கிறீர்கள், ஆனால் பல கட்டிடங்கள் விதியை மீறி இருக்கின்றன. அவைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததற்கு கோர்ட்டும் ஒரு காரணமா?
ப:- ஆமாம். கோர்ட்டுகளுக்கு சென்று சட்டப் பிரிவுகளை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டு விடுகிறார்கள்.
கே:- கட்டிடங்கள் கட்டி முடித்து முழுமை அடைந்ததற்கான சான்றிதழ் கொடுத்த பிறகு தானே கடைகள் செயல்பட வேண்டும். சென்னை சில்க்ஸ் கட்டிடத்துக்கு அவ்வாறு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதா?
ப:- முழுமை அடைந்ததற்கான சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை. வணிக வளாகங்கள் இந்த மாதிரி விதிமுறைக்கு மாறாக கட்டிடங்களை கட்டி விட்டு வழக்கு அது இது என்று சென்று விடுகிறார்கள். புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் பணி நிறைவடைந்ததற்கான சான்றிதழ் பெறாமல் செயல்பட முடியாது. அதை நாங்கள் முறையாக கண்காணித்து வருகிறோம். உயரமான கட்டிடங்களில் புதிதாக விதிமுறை மீற முடியாது. குடியிருப்புகளில் தான் ஆங்காங்கே விதிமுறை மீறல் நடக்கிறது. அதையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கே:- திராவிட கட்சிகளின் ஆட்சியில் கையூட்டு பெற்று அனுமதிக்கு புறம்பாக கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டதாக டாக்டர் ராமதாஸ் புகார் கூறியுள்ளாரே?
ப:- அவர் அரசியல் ரீதியாக பேசுகிறார். இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அது அவரது சொந்த கருத்து. எங்களை பொறுத்த வரை மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான கட்டிடங்கள் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் துணைத் தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உடன் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *