முத்தப் போராட்டத்துக்கும் மாட்டிறைச்சி திருவிழாவுக்கும் என்ன பெரிய வித்தியாசம்: கஸ்தூரி சாடல்
ஐஐடி மாணவர்கள் நடத்தி வரும் மாட்டுக்கறி திருவிழாவை கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார் கஸ்தூரி
மாட்டிறைச்சி தடை குறித்து மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மாட்டுக்கறி திருவிழா நடைபெற்று வருகிறது. சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி திருவிழா நடத்திய மாணவர் மீது தாக்குதல் நடத்தி சர்ச்சையாகி உள்ளது.
மாட்டுக்கறி திருவிழா நடத்தி வரும் மாணவர்களை கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார் கஸ்தூரி. தனது ட்விட்டர் பதிவில், “”மாட்டிறைச்சி திருவிழா நடத்தியது தவறான சிந்தனை. ஒரு தரப்பை புண்படுத்தி எதிர்ப்புகளை எழுப்பவே நடத்தப்பட்டுள்ளது. இப்பொது அது கிடைத்துவிட்டது. நான் இந்த கால்நடை இறைச்சிக்கான தடையை எதிர்க்கிறேன்.
ஆனால் எனது உணவுப் பழக்கம் என்னை சுற்றியிருக்கும் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது. மாட்டிறைச்சி சாப்பிட்டால் நாம் ஒன்றும் நாயகர்கள் அல்ல. முத்தப் போராட்டத்துக்கும் மாட்டிறைச்சி திருவிழாவுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது? மலிவான செயல். கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம். ஐஐடியில் படித்தவர்களுக்கு வன்முறை கை கொடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி