பிரித்வி-II ஏவுகணையை ஒடிசாவில் இருந்து இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா
ஒடிசா மாநில கடலோர நகரமான பலசோரில் உள்ள சாந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து பிரித்வி-II ஏவுகணை இன்று காலை விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்புக்காக பிரித்வி ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பிரித்வி-II வகை ஏவுகணை சுமார் 350 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்துச் சென்று தாக்கும் சக்தி கொண்டது.
பிரித்வி-II ரக ஏவுகணைகள் ராணுவ பயன்பாட்டுக்காக ஏற்கனவே சேர்க்கப்பட்டு விட்டது. என்றாலும் அது அடிக்கடி நவீனமாக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநில கடலோர நகரமான பலசோரில் உள்ள சாந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து பிரித்வி-II ஏவுகணை இன்று காலை 9.50 மணியளவில் விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.
9 மீட்டர் உயரமும், ஒரு மீட்டர் தடிமனும், 4.6 கிலோ எடையும் கொண்டது இந்த ஏவுகணை. 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திட்டமிட்ட இலக்கை துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது.
இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் பிரித்வி-II ஏவுகணையில் தற்போது சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி பிரித்வி-II ஏவுகணைகளில் 500 முதல் 1000 கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்களை வைத்து பயன்படுத்த முடியும்.