இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டி.டி.வி. தினகரன் ஜாமீனில் இன்று விடுதலை

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான டிடிவி தினகரன் ஜாமீன் பெற்றதை அடுத்து இன்று பிற்பகல் டெல்லி திகார் ஜெயிலில் இருந்து விடுதலையாகிறார்.

அ.தி.மு.க. பிளவுபட்டதைத் தொடர்ந்து அந்த கட்சியின் “இரட்டை இலை” சின்னத்தை தலைமை தேர்தல் கமி ஷன் கடந்த ஏப்ரல் மாதம் முடக்கியது.

இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற சசிகலா அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. டெல்லியில் பிடிபட்ட பிரபல இடைத்தரகர் சுகேஷ் கொடுத்த தகவல்களைத் தொடர்ந்து டெல்லி போலீசார் டி.டி.வி. தினகரனை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள்.

பிறகு ஏப்ரல் 25-ந் தேதி தினகரன் கைது செய்யப்பட்டார். அவருடன் பணப்பட்டுவாடா செய்ய உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி மனு செய்தனர். அந்த மனு மீதான விசாரணை டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி முன்னிலையில் நடந்தது. நேற்று நடந்த விசாரணைக்குப் பிறகு டி.டி.வி. தினகரனை ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதி தனது உத்தரவில், “இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் 38 நாட்களாக சிறையில் உள்ளார். அவரிடம் இருந்து தேவையான ஆவணங்கள் பெறப்பட்டு விட்டன. லஞ்சம் பெற முயன்ற தேர்தல் கமி‌ஷன் ஊழியர் யார் என்று தெரியவில்லை. எனவே டி.டி.வி.தினகரனுக்கு இனி காவல் தேவை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

டி.டி.வி.தினகரன் ரூ.5 லட்சம் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாத ஜாமீன் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இடைத்தரகர் சுகேஷ், ஹவாலா ஏஜெண்டுகள் நதுசிங், லலித்குமார் ஆகியோர் விடுவிக்கப்படவில்லை. அவர்களை ஜூன் 5-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே ஜாமீன் கிடைத்ததால் அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை உடனடியாக விடுவிக்க அவரது வக்கீல்கள் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் ரூ. 5 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று தினகரன் விடுதலை ஆகவில்லை.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு டி.டி.வி. தினகரனின் வக்கீல்கள் ரூ. 5 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்தனர். இந்த நடைமுறைகள் இன்று மதியம் வரை நடந்தது.

இன்று பிற்பகல் டெல்லி திகார் ஜெயிலில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுதலையாகிறார்.

டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் கிடைத்த தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் டெல்லி சென்றனர். வேணுகோபால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கத் தமிழ்ச்செல்வன், வெற்றி வேல், முன்னாள் எம்.எல். ஏ.க்கள் பி.ஜி.ராஜேந்திரன், மேலூர் சாமி, சோழன் பழனிசாமி, மைக்கேல் ராயப்பன் ஆகியோர் டெல்லியில் சிறை வாசலில் உள்ளனர்.

அவர்கள் டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். 38 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு டி.டி.வி.தினகரன் விடுதலை ஆவதால், அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றிரவு டி.டி.வி.தினகரன் சென்னை திரும்புவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் சென்னையிலும் அவருக்கு வரவேற்பு கொடுக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே அவர்கள் நாளை (சனிக்கிழமை) டி.டி.வி.தினகரனை சென்னை அழைத்து வர முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக தினகரன் ஆதரவாளர்கள் கூறியதாவது:-

டி.டி.வி.தினகரன் விடுதலை செய்யப்பட்டிருப்பதால் அ.தி.மு.க.வில் மீண்டும் புத்துணர்ச்சி திரும்பியுள்ளது. எங்களுக்கு அவர் தான் தலைவர். அவர் அ.தி.மு.க.வை தொடர்ந்து வழி நடத்துவார்.

பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இருவரையும் அ.தி.மு.க.வில் இருந்து யாராலும் நீக்க முடியாது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் ஆதரவு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *