அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் மீனவர்கள் திடீர் முற்றுகை
காசிமேட்டில் மீன் விற்பனையகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் உதவி தொகை சிலருக்கு கிடைக்காததை கண்டித்தும், மீனவர்கள் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டை முற்றுகையிட்டனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் காலை கடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை வியாபாரிகள் வாங்கி மார்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள். சில்லறை வியாபாரிகளும் மீன்களை வாங்கி செல்கிறார்கள்.
இதே போல பொதுமக்கள் விலை குறைவாக இருப்பதால் காசிமேடு விற்பனையகத்திற்கு வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இந்த மீன் விற்பனையகத்திற்கு பதிலாக புதிய விற்பனையகம் காசிமேட்டிலேயே வேறு இடத்தில் கட்டப்பட்டு வந்தது. சமீபத்தில் புதிய மீன் விற்பனையகம் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் வியாபாரிகள் புதிய விற்பனையகத்திற்கு செல்லாமல் பழைய இடத்திலேயே வியாபாரம் செய்து வருகிறார்கள்.
புதிய மீன் விற்பனையகம் உள்ள இடம் துறைமுகத்தில் இருந்து தூரத்தில் உள்ளதால் தங்களது வியாபாரம் பாதிக்கும் என்றும் அதன் அருகே எண்ணூர் நெடுஞ்சாலை இருப்பதால் மீன்களை கொண்டு வருவதற்கு இடையூறாக இருக்கும் என்றும் எனவே பழைய மீன் விற்பனையகத்தை நவீனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் காசிமேட்டில் மீன் விற்பனையகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் உதவி தொகை சிலருக்கு கிடைக்காததை கண்டித்தும், மீனவர்கள், வியாபாரிகள் இன்று பட்டினப்பாக்கத்தில் உள்ள நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் இல்லை.
தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்.