சிறுமி உள்பட 4 பேரை கொன்ற மதம் பிடித்த யானையை பிடிக்க 4 கும்கிகள் வரவழைப்பு
கோவையில் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்து 4 பேரை கொன்ற ஒற்றை யானையை பிடிக்க 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
கோவையில் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்து 4 பேரை கொன்ற ஒற்றை யானை தற்போது வெள்ளாளம்பாளையத்தில் பழனிசாமி என்பவரது தோட்டத்தில் பதுங்கி உள்ளது.
யானைக்கு மதம் பிடித்ததால் தான் இவ்வாறு உயிர் பலி வாங்குவதாக கூறிய வனத்துறை அதிகாரிகள் கும்கி யானைகள் உதவியுடன் அதனை மடக்கிப் பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி டாப்சிலிப் முகாமில் இருந்து ‘கலீம்’, ‘மாரியப்பன்’, சாடிவயல் முகாமில் இருந்து ‘பாரி’, ‘சுஜய்’ என மொத்தம் 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
ஒற்றை யானை நிற்கும் இடத்தை சுற்றி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்களை யாரும் செல்லாத படி 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், உதவி கலெக்டர் மதுராந்தகி, மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் முகாமிட்டு யானையை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கும்கி யானைகள் உதவியுடன் மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தியவுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கால்நடை மருத்துவர்கள் மனோகரன், அசோகன் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர். கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கும் போது பொது மக்கள் கூச்சல் போட்டு யானையின் மதம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் அமைதிகாக்கும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
மதம் பிடித்த யானையை கும்கி யானைகளால் பிடிக்க முடியாமல் மதம் மேலும் அதிகமாகி மீண்டும் ஊருக்கும் புகும் நிலைமை ஏற்பட்டால் யானையை சுட்டு பிடிக்க துப்பாக்கியுடன் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.