மறைந்த அப்துல் ரகுமானுக்கு நாளை மறுநாள் இறுதி சடங்கு: ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இறுதிச் சடங்கு நாளை மறுநாள் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.
இந்நிலையில், மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “கவிக்கோ அப்துல் ரகுமானின் மறைவு செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். திமுக மீதும் கருணாநிதி மீதும் மிகுந்த பற்றுடன் இருந்தவர் அப்துல் ரகுமான்.தமிழுக்கு கவிக்கு வெகுமான இருந்தவர். அவரது தமிழ் என்றைக்கும் நிலைத்து நிற்கும். அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
ஸ்டாலினை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்கு, பனையூரில் நாளை மறுநால் நடைபெறும் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ரகுமானின் மகன் லண்டனில் இருந்து வர வேண்டியுள்ளதால் கவிக்கோ அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்கு நாளை மறுநாள் நடைபெறும் என கூறப்படுகிறது.