தனியார் பால் பாக்கெட்டுகள் பரிசோதிக்கப்படும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு
ரசாயன கலப்படத்தை கண்டுபிடிக்க தனியார் பால் பாக்கெட்டுகள் பரிசோதிக்கப்படும் என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னையில் இன்று கூறியதாவது:-
கலப்பட பால் குறித்து விசாரணை நடத்த கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வழக்கு தொடரப்பட்டதை பாராட்டலாம்.
பால் விசயத்தில் அரசு மவுனம் காக்கவில்லை. வெளிப்படையாக அனைத்து விவரங்களையும் சொல்லி வருகிறோம்.
நீண்ட நாட்களுக்கு மாம்பழம் கெடாது என்று சொன்னால் அதில் உண்மை தன்மை இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
அதே போல்தான் பால் 30 நாட்களுக்கு கெடாது என்று விற்பனை செய்கிறார்கள். எப்படி 30 நாட்களுக்கு கெடாமல் இருக்கும்? என்று மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
அப்படியானால் அதில் என்னென்ன வேதிப் பொருட்கள் கலந்துள்ளது என்பதை ஒவ்வொருவரும் அறிய முன் வரவேண்டும்.
பாலில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுவதாக தகவல் வந்ததும் அனைத்து தனியார் பால் பாக்கெட்டுகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
ஆவின் பாலும் தினசரி சோதனை செய்த பிறகே விற்பனைக்கு வருகிறது.
சில தனியார் நிறுவனங்களின் பாலில் கலப்படம் இருப்பது உறுதியாகி உள்ளதால் அனைத்து தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
பாலில் ரசாயன கலப்படம் செய்து, மக்களின் உயிரோடு விளையாடுவதை இந்த அரசு ஒரு போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கும்.
ஆய்வு முடிவுகள் வந்ததும் அதுபற்றி மக்களுக்கு முழு விவரத்துடன் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.