நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஒ இயங்குதளம்
சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய பதிப்பான ஆண்ட்ராய்டு ஒ வழங்கப்படும் என எச்எம்டி குளோபல் தெரிவித்துள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்த நோக்கியா ஸ்மார்ட்போன்களில் புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு புதிய ஆண்ட்ராய்டு மென்பொருள் அப்டேட்கள் வழங்கப்படும் என எச்எம்டி குளோபல் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
அதன்படி நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஒ பதிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு ஒ பதிப்பு கூகுள் வழங்கியதும் நோக்கியா போன்களுக்கும் இவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு ஒ பதிப்பிற்கான டெவலப்பர் பிரீவியூ மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் ஆண்ட்ராய்டு ஒ பதிப்பில் பேக்கிரவுண்டு லிமிட்ஸ், நோட்டிபிகேஷன் சேனல்கள், பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ, ஆடாப்டிவ் ஐகான் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நோக்கியா 3310 (2017) விற்பனை ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.10,000, ரூ.13,000 மற்றும் ரூ.16,000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.