யானைகள் கூட்டமாக வந்து தாக்கியதில் 4 பேர் மரணம்: குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்

வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தபோது கூட்டமாக வந்து யானைகள் தாக்கியதில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், குறிச்சி மற்றும் வெள்ளலூர் கிராமத்தில் இன்று (2–ந் தேதி) அதிகாலை, காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து, வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகள் காயத்திரி, வெள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி நாகரத்தினம்,
மாரியப்பன் என்பவரின் மனைவி ஜோதிமணி மற்றும் குப்பண்ண கோனார் என்பவரின் மகன் பழனிசாமி ஆகிய நான்கு நபர்களை தாக்கி, அதனால் அவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
காட்டு யானை தாக்கியதில் அகால மரணமடைந்த காயத்திரி, நாகரத்தினம், ஜோதிமணி மற்றும் பழனிசாமி ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காட்டு யானை தாக்கியதில் மூன்று நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிசிச்சை அளிக்க கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 59,100 -ரூபாயும் வனத்துறை மூலம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியிலிருந்து, 4 காட்டு யானைகள் ரெயில்வே பாதை வழியாக சென்று உள்ளது. இதில், ஒரு யானை மட்டும் வழிதவறி, கணேசபுரம் பகுதிக்குள், இன்று அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்தது.
மூராண்டம்மன் கோயில் வீதி வழியாக சென்ற யானை, வீட்டு வாசலில் படுத்து உறங்கி கொண்டிருந்த, சிறுமி காயத்ரி மற்றும் அவரது தந்தை விஜயக்குமாரை மிதித்தது.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, ரத்த வெள்ளத்தில் கிடந்த காயத்ரி மற்றும் படுகாயமடைந்த விஜயகுமாரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு, காயத்ரியை பரிசோதித்த மருத்துவர்கள், அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லுமாறு அறிவுறுத்தினர். அரசு மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே, காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளலூரில்பதுங்கியது
கணேசபுரம் பகுதியிலிருந்து புறப்பட்ட யானை, மேட்டூர், ஆடிட்டர் வீதி, ஈஸ்வர் நகர் வழியாக வந்து, காலை 5 மணியளவில், வெள்ளலூர் காட்டுப்பகுதிக்குள் நுழைந்தது.
புதர்களுக்குள் மறைந்து நின்ற யானை, அங்கு, இயற்கை உபாதை கழிக்க சென்ற, நாகரத்தினம் (வயது 50), ஜோதிமணி (68) ஆகியோரை தாக்கியது.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். வேல், கம்புகளுடன் யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். இதனால் ஆவேசமடைந்த யானை விரட்டத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் தலைதெறிக்க ஓடினர். இதில், கீழே விழுந்து அப்பகுதியை சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
மூன்றுபேர்பலி
இதற்கிடையே, யானை வெள்ளலூர் வெள்ளபாளையம் பகுதிக்கு சென்றது. அங்கு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று கொண்டிருந்த பழனிசாமியை (73) தூக்கி வீசியது. இதில் அவரும் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த நாகரத்தினம், ஜோதி மணி, பழனிசாமி ஆகியோரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே நாகரத்தினம், ஜோதிமணி ஆகியோர் இறந்தனர். பழனிசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பொதுமக்கள்பீதி
காட்டு யானை ஊருக்குள் புகுந்த விவரம் அறிந்த பொதுமக்கள் பீதியடைந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக இது குறித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், கோவை மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் தலைமையில், வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் மனோகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கும்கியானைபாரி
மருத்துவர் மனோகர் தலைமையில், தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைக்கு, துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மேலும், ஊழியர்கள், வேட்டைத்தடுப்புக் காவலர்கள், பட்டாசுகள் வெடித்து யானையை வனபகுதிக்குள் விரட்ட முயன்றனர்.
ஆக்ரோஷ நிலையில் இருந்த காட்டு யானையை அடக்க, சாடிவயலிலிருந்து கும்கி யானை பாரி வரவழைக்கப்பட்டது.
இதற்கிடையில், காட்டு யானை பிடிபடும் வரையில், அப்பகுதி பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து, கலெக்டர் ஹரிஹரன், போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காட்டு யானையை விரட்டும் பணியை பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினர். இந்நிலையில், மயக்க ஊசி செலுத்தப்பட்டதையடுத்து, யானை அசையாமல் ஓர் இடத்தில் நின்றது. யானை மயக்கமடையும் நிலையில் தூக்குவதற்காக, கயிறு, தண்ணீர் ஆகியவற்றை, தோட்டத்திற்குள் வனத்துறையினர் எடுத்துச் சென்றனர். சுமார் 6 ஜேசிபி இயந்திரங்கள் தோட்டத்திற்குள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.காட்டு யானையை விரட்டும் பணியில், 200க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஜோதிடரானதந்தை
கோவை போத்தனூர் அருகே உள்ள கணேசபுரம் மூராண்டம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 38). கைரேகை ஜோதிடர். இவரது மகள் காயத்ரி (12), காட்டுயானை தாக்கியதில் பாலியான காயத்ரி, கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 7–ம் வகுப்பு படித்து வந்து உள்ளார். விஜயகுமாருக்கு, 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில், மூத்த மகள் சிறுமி காயத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *