கூடங்குளத்தில் 5, 6-வது அணுஉலைகள் ஒப்பந்தம்: ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புதின் – பிரதமர் மோடி கையெழுத்து

ரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது கூடங்குளத்தில் 5, 6-வது அணுஉலைகள் அமைக்க இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 6 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். ஜெர்மனி, ஸ்பெயின் பயணத்தை நிறைவு செய்த அவர் நேற்றுமுன்தினம் இரவு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சென்றடைந்தார்.
பிரதமர் மோடி அந்த நகரில் உள்ள 2ம் உலகப்போரில் இறந்த 5 லட்சம் வீரர்களின் நினைவிடம் மற்றும் கல்லறைக்கு சென்றார். அங்கு வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள கோன்ஸ்டன்டின் அரண்மனையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நேற்று மாலை தொடங்கிய இந்திய, ரஷ்ய 18வது உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரவேற்றார். அப்போது புதின் பேசுகையில், இந்தியா, ரஷ்யா இடையே மிக நீண்டகாலமாக நட்புறவு நீடிக்கிறது. இருநாடுகளும் பரஸ்பரம் நம்பிக்கை வைத்துள்ளன. இந்தியா, ரஷ்யா இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நேரத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அடுத்த ஒரு வாரத்தில் இந்தியா நிரந்தர உறுப்பினராகிவிடும்’ என்றார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001-ல் தொடங்கப்பட்டது. இதில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அந்த அமைப்பில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் உறுப்பினர்களாக சேர்க்க கடந்த 2015-ல் முடிவு செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இந்தியா, ரஷ்யா இடையிலான நட்புறவு மிகவும் பழமையானது, ஆழமானது, பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான சர்வதேச விவகாரங்களில் இருநாடுகளும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன என்றார்.
பொதுவாக சர்வதேச உறவுகளில் ஏற்றத் தாழ்வுகள் இயல்பானவை. ஆனால் இந்திய, ரஷ்ய உறவில் எப்போதும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டது இல்லை. நாம் ஒன்றாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதும் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டும் என்பது மட்டுமே இருநாடுகளின் விருப்பம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளித்த ரஷ்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
ரஷ்ய வீரர்களின்
கல்லறையில் அஞ்சலி
அப்போது ரஷிய வீரர்களின் கல்லறைக்கும், இறந்த வீரர்கள் நினைவிடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தியதையும் புதினிடம் மோடி குறிப்பிட்டார். ‘தியாகம் செய்தவர்களின் குடும்பத்தில் இருந்துவந்த தலைவர் நீங்கள். உங்கள் சகோதரர் ஒரு ‘போர் தியாகி’ என்றார்.
போர் நினைவிடத்திற்கு சென்றதற்காக நன்றி தெரிவித்த புதின், இதுபோன்ற இடங்கள் ரஷிய மக்களின் இதயத்தில் சிறப்பு இடம் பெற்றவை என்றார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநாட்டில் கூடங்குளத்தில் 5, 6-வது அணுஉலைகள் அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடியும் அதிபர் புதினும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் 5, 6-வது அணுஉலை களை அமைக்க இருதலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்..
பின்னர் இரு தலைவர்களும் ‘21-ம் நூற்றாண்டுக்கான ஒரு தொலைநோக்கு அறிக்கை’ ஒன்றையும் வெளியிட்டனர்.
தொலைநோக்கு அறிக்கை
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் இறுதியாக 5 மற்றும் 6வது அணு உலைகளை ரஷியா உதவியுடன் கட்டுவது என்ற முடிவுக்கு வரப்பட்டுள்ளது. இதற்கான பொது கட்டமைப்பு ஒப்பந்தம் மற்றும் நிதி தொடர்பான அறிவிப்புகள் இந்தியா–ரஷியா இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள வருடாந்திர பேச்சுவார்த்தையில் வெளியிடப்படுகிறது. இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்த அணு உலைகளை இந்திய அணுமின் கழகம் மற்றும் ரஷிய அணுசக்தி ஏற்றுமதி நிறுவனம் ஆகியவை இணைந்து கட்டுகின்றன. இந்த 2 அணு உலைகளும் தலா 1,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியவை.
இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே ஒரு எரிசக்தி பாலத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம். அணுமின் நிலையங்கள், ஹைட்ரோ கார்பன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்பட அனைத்து வகைகளிலும் எரிசக்தியை மேம்படுத்த இருநாடுகள் இடையே உள்ள நல்லுறவை மேம்படுத்துவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் ஏற்கனவே 2 அணு உலைகள் ரஷியா உதவியுடன் கட்டப்பட்டு மின் உற்பத்தி செய்து வருகிறது. 3, 4வது அணு உலைகள் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியபோது, புதிய அணுஉலைகள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது இந்திய, ரஷ்ய உறவை மேலும் வலுப்படுத்தி யுள்ளது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *