அமெரிக்க ஸ்பெல் பீ போட்டியில் இந்திய சிறுமி அனன்யா சாம்பியன்
மேரிலாண்ட்: ஸ்பெல் பீ போட்டியில் அமெரிக்கா வாழ் இந்திய சிறுமி அனன்யா வினய் (12) சாம்பியன் ஆகி உள்ளார். இவர் ரூ.26 லட்சம் ரொக்கப்பரிசு பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ஸ்பெல் பீ போட்டி நடந்து வருகிறது. கடந்த வியாழன் அன்று மேரிலாண்டில் உள்ள ஒக்சோன் ஹில் பகுதியில் நடந்தது. இறுதிப்போட்டியில் ஓக்லஹோமாவை சேர்ந்த ரோகன் ராஜீவ் என்பவரை, கலிபோர்னியாவில் வசிக்கும் அனன்யா எதிர்கொண்டார். 20 சுற்றுகள் நடந்த போட்டியில், எந்தவொரு வாய்ப்பையும் தவற விடாமல் சிறப்பாக செயல்பட்டு வெற்றி வாய்ப்பை அனன்யா தனதாக்கி கொண்டார்.
வெற்றி பெற்ற போதிலும், பெரிய அளவில் மகிழ்ச்சியை வெளிகாட்டாமல், புன்னகைத்தவாறு ரோகன் ராஜீவுக்கு ஆறுதல் கூறிய அனன்யாவுக்கு 40 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.கடந்த 2013ம் வருடம் மூலம் ஸ்பெல் பீ போட்டி ‘டையில்’ முடிந்ததால், பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. தற்போது அனன்யா இந்த பரிசை தனியாக வென்றுள்ளார். இந்த வெற்றி மூலம் தனது கனவு நினைவாகியுள்ளதாக அனன்யா கூறினார். மேலும் இந்த பரிசை தொடர்ச்சியாக பெறும் 13வது அமெரிக்க வாழ் இந்தியர் என்ற பெருமையையும், கடந்த 22 வருடங்களில் இந்த பரிசை பெறும் 22வது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையையும் அனன்யா பெற்றுள்ளார்.