ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்: கமல்ஹாசன் ஆதங்கம்
சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு நானும் வெளியேறவேண்டியதுதான் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
28 சதவீதமாக அறிவிக்கப் பட்டுள்ள சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை 12 முதல் 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சென்னை திரைப்பட வர்த்தக சபையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் எல்.சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கமல்ஹாசன் பேசியதாவது:
ஹாலிவுட் சினிமாவுக்கு இணையாக இந்திய சினிமாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வந்திருப்பது சரியானதல்ல. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், இந்திய படங்களையும் ஒரே அடிப்படையில் வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? அதேபோல் இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்தி பேசும் மக்களுக்காக எடுக்கும் இந்தி படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் ஒரே வரி என்பது எந்த விதத்தில் நியாயம்? ஒரு பிராந்திய மொழியின் வீச்சு மற்றும் பலம் என்பது அதன் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதுதான்.
ஆனால், உலகளாவிய ரசிகர் களை கொண்டிருக்கும் ஹாலிவுட் படங்கள் மற்றும் இந்திய அளவில் ரசிக்கப்படும் இந்தி படங்களுக்கும் ஒரே அளவில் வரி என்பது சரி யல்ல. பிராந்திய மொழி பேசும் மக்கள் உலகில் வேறு எந்த பகுதி யில் வசித்தாலும், அவர்களது எண் ணிக்கை மிகக் குறைவானதுதான். அவர்களால் திரைப்பட டிக்கெட்டு களுக்கான விலை அதிகரிப்பை சமாளிக்க இயலாது. ஆனால் உலக அளவில் விருதுகளைப் பெற்று பெருமை சேர்ப்பது பிராந்திய மொழி படங்கள்தான். இவ்வாறான சிரமங்களை சிறிய படங்களால் எதிர்கொள்ள முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சினிமாவை சூதாட்டமாக யாரும் கருத வேண்டாம். அதை கலையாகப் பார்க்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசுடன் உரையாடல் நடைபெற்று வருகிறது. யாரால் எது சாத்தியம் என்பதை அரசு தெரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். சினிமாவை தனியாகப் பிரித்து பார்க்க வேண்டாம். இந்த வரி அதிகரிப்பால் முறையான கணக்கை சமர்ப்பிக்கவும் வழியில்லாத நிலை உருவாகும். என் மழலை மொழி மாறியதே இந்த சினிமாவில்தான். இதுதான் என் வாழ்க்கை. நாம் தொழில் பண்ண வேண்டும். சினிமா துறை மீதான இந்த ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு நானும் வெளியேற வேண்டியதுதான். ஆகவே, அரசு இதை புரிந்துகொண்டு எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.