தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விருகம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு முதலே பலரும் நேரிலும், போனிலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தவாறு இருந்தனர்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர், தமிழிசை சவுந்தரராஜனையும், பிரதமர் நரேந்திர மோடியையும் மிரட்டும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து, தமிழிசை சவுந்தரராஜன் தனது வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்கு பதிந்து சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரிக்கின்றனர். மிரட்டலைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விருகம்பாக்கம் போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தமிழிசை வீட்டைச் சுற்றி ரோந்து வருகின்றனர்.