தேசிய தலைவர்களாலும் மதிக்கப்படுபவர் கருணாநிதி: ஜி.கே.வாசன் வாழ்த்து
தமிழக முதல்வராக பல ஆண்டுகள் பணியாற்றிய கருணாநிதி தேசிய தலைவர்களாலும் மதிக்கப்படுபவர் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு வாசன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ”திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்து தமிழகத்தின் தலைநகருக்கு வந்து பெரியாரின் தத்துவங்களை உள்வாங்கி, அண்ணாவிடம் அரசியல் பயின்று சாதனை படைத்தவர் கருணாநிதி.
தமிழக முதல்வராக பல ஆண்டுகள் பணியாற்றிய அவர், தேசிய தலைவர்களாலும் மதிக்கப்படுபவர். படிப்பது, இலக்கியம் படைப்பது, எழுதுவது, பேசுவது என இடைவிடாமல் மக்களுக்காக அவர் உழைத்துக் கொண்டே இருப்பவர். இலக்கியம், கலை, சமுதாயம், அரசியல் ஆகிய நான்கு தளங்களிலும் முத்திரைப் பதித்தவர் கருணாநிதி மட்டுமே.
தன்னம்பிக்கை, தளராத உழைப்பு, தோல்வி கண்டு துவளாமை, என்றும் துளிர்க்கும் போராட்ட உணர்வு ஆகியவையே அவரது வெற்றிக்கு படிக்கட்டுகளாக அமைந்தன. சட்டப்பேரவையில் கன்னிப் பேச்சிலேயே பேரவைத் தலைவரை கவர்ந்தவர். நல்ல பேச்சு என பாராட்டையும் பெற்றவர்.
சட்டப்பேரவையில் 60 ஆண்டுகள் என்பது எவரும் எட்ட முடியாத சிகரம். சாதாரண மனிதராக வாழ்வைத் தொடங்கி, சாதனை நாயகராக உயர்ந்து நிற்கும் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் சீரிய பணிகள் தொடர வேண்டும். வைர விழா நாயகரே, வாழ்க நூற்றாண்டு என வாழ்த்துகிறேன்” என்று வாசன் தெரிவித்துள்ளார்.