கருணாநிதிக்கு குடியரசு தலைவர் வாழ்த்து
இன்று 94-வது பிறந்த நாள் காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் எம்.ஹமீது அன்சாரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருணாநிதிக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “பிறந்த நாளை முன்னிட்டு உங்களுக்கு எனது நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியத்துடனும் வாழ கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “94-வது பிறந்த நாள் காணும் தங்களுக்கு இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்கு பணியாற்ற பிரார்த்தனை செய்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “சமூக பொருளாதார சீர்திருத்தங்களிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவதிலும் கருணாநிதி முக்கிய பங்காற்றியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என் சொந்த மாநிலத்தில் சில முக்கிய பணிகள் உள்ளதால் பிறந்தநாள் விழாவில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.