இலவச, கட்டாய கல்வியில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை

இலவச, கட்டாயக் கல்வியில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இச்சேர்க்கைக்கு மொத்தம் 79,842 விண்ணப்பங்கள் இணைய வழியாக பெறப்பட்டுள்ளன. இவற்றில் 12,017 விண்ணப்பங்கள் ஒரு முறைக்கு மேல் விண்ணப்பிக்கப்பட்டவை. இவை நீங்கலாக 67,825 விண்ணப்பங்கள் சேர்க்கைக்கு தகுதியானவை.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் கடந்த 31-ந்தேதி குலுக்கல் முறையில் சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் விவரத்தை www.tnmatricschools.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 5-ந்தேதி தேர்வு செய்யப்படும் குழந்தைகளுக்கு சம்மந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும். ஆவணங்கள் ஏதும் முன்னிலைப்படுத்த வேண்டியிருப்பின் அதனை 5-ந்தேதிக்குள் சம்மந்தப்பட்ட பள்ளியில் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மீதமுள்ள காலி இடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் சார்பாக கல்விக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மாறாக கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *