ரூபி ராயை தொடர்ந்து முதல் மதிப்பெண் பெற்ற பீகார் மாணவர் கைது

போலி ஆவணங்கள் பயன்படுத்தியதாக பிளஸ்-2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற பீகார் மாணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பீகார் மாநிலத்தில் இரு தினங்களுக்கு முன் ‘பிளஸ்-2’ தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் கலைப்பிரிவில் 82.6 சதவீத மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்த கணேஷ் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலி ஆவணங்கள் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

முன்னதாக இசை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இசை பற்றியே தெரியாதவர் போல பதில் அளித்தார். அதுமட்டுமல்லாமல் அவரது பதில்கள் அனைத்துமே ஏமாற்றம் தரும்படி இருந்தது. இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குநரகம் அவரிடம் விசாரணையும் நடத்தியது.

அதில் அவர் போலி ஆவணங்கள் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலி சான்றிதழ்களை பயன்படுத்தி தேர்வு எழுதிய குற்றத்திற்காக, கணேஷ் குமார் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் மணு மகாராஜ் தெரிவித்துள்ளார்.

போலி ஆவணங்கள் வழங்கியது குறித்து கேட்பதற்காக பீகார் பள்ளி கல்வி இயக்குநர் ஆனந்த் கிஷோர், கணேஷ் குமாரை அழைத்திருக்கிறார். இதில் கணேஷ் குமார் போலி ஆவணங்கள் பயன்படுத்தியது தெரிய வந்ததால் பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

முன்னதாக கடந்த ஆண்டும் 12-ஆம் வகுப்பு இறுதித் தேர்வில் முதலிடம் பிடித்த ரூபி ராய் என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார். ரூபி பொலிடிகல் சயின்ஸ் என்பதை ப்ரோடிகல் சயின்ஸ் என்று கூறியதுடன், அவர் சமையல் சார்ந்த பிரிவில் படித்ததாக கூறியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *